உலக மேடையில் தடம்பதித்த சிங்கப்பூர்ச் சிறுவர் அரும்பொருளகம்

2 mins read
6707dcb5-5d34-475d-91cf-94db97329094
லிவர்பூலில் நடைபெற்ற ‘ஹேண்ட்ஸ் ஆன் இண்டர்நேஷனல்’ (Hands On! International) மாநாட்டில் இறுதிப் போட்டியாளருக்கானச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார் சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகத்தின் இயக்குநர் அஸ்மா அலியாஸ் (இடது). - படம்: சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகம்.
இறுதிப் போட்டியாளருக்கான சான்றிதழோடு சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகக் குழுவினர்.
இறுதிப் போட்டியாளருக்கான சான்றிதழோடு சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகக் குழுவினர். - படம்: சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகம்.

குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் பிடித்தமான உள்ளூர்ச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகம் உலக வரைபடத்தில் தன் முத்திரையைப் பதித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான ‘அரும்பொருளகத்தில் குழந்தைகள்’ விருதின் ஐந்து உலகளாவிய இறுதிப் போட்டியாளர்களில் ஒன்றாக சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. லிவர்பூலில் நடைபெற்ற ‘ஹேண்ட்ஸ் ஆன் இண்டர்நேஷனல்’ (Hands On! International) மாநாட்டில் இவ்விருது வழங்கப்பட்டது.

ஹங்கேரி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்த நிறுவனங்களும் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. இறுதியில், 2025ஆம் ஆண்டுக்கான விருதை அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த லா னுபே ஸ்டீம் டிஸ்கவரி நிலையம் (La Nube STEAM Discovery Center) தட்டிச் சென்றது.

ஓர் அஞ்சல்தலை அரும்பொருளகமாகத் தொடங்கி, அண்மையில் சிறார்களின் கற்றலுக்கும் விளையாட்டுக்கும் ஒதுக்கப்பட்ட இடமாக சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகம் உருமாறியது.

அனைத்துலக நடுவர் குழு இதை அங்கீகரிக்கும் விதமாக சிறுவர் அரும்பொருளகம் ‘ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை’ அடைந்துள்ளது என்றும் இது ‘பரந்த சமூகத்திற்கு ஒரு முன்மாதிரி’ என்றும் விவரித்தது.

புத்தாக்கமும் படைப்பாற்றலும் நிறைந்த கண்காட்சிகள், அனைவரையும் உள்ளடக்கும் பொதுச் சேவைத் திட்டங்களைச் செயல்படுத்துதல், பங்காளி நிறுவனங்களின் ஆதரவோடு பொதுமக்கள் ஈடுபாட்டு நிகழ்ச்சிகளை நடத்துதல், நாட்டில் பல்லினச் சமுதாயத்தின் அடையாளத்தை வளர்த்தல், சிறார்களின் குரலுக்கு முக்கியத்துவம் அளித்தல் என அரும்பொருளகத்தின் முக்கிய கூறுகளை நடுவர்கள் மெச்சினர்.

“சிறந்த புகழ்பெற்ற அரும்பொருளகங்களுக்கு மத்தியில் இறுதிப் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் பெருமையாக உள்ளது. எங்கள் குழுவின் அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் உறுதிப்படுத்தும் விதமாக இவ்விருது விளங்குகிறது,” என்றார் சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகத்தின் இயக்குநர் அஸ்மா அலியாஸ்.

2011ஆம் ஆண்டு ஐரோப்பிய அரும்பொருளகக் கழகம், ஹேண்ட்ஸ் ஆன் இண்டர்நேஷனலுடன் இணைந்து ‘அரும்பொருளகத்தில் குழந்தைகள்’ விருதை ஏற்படுத்தியது. அப்போதுமுதல், 14 வயது வரையிலான சிறார்களுக்குச் சிறந்த, புதுமையான அனுபவங்களை வழங்கும் அரும்பொருளகங்களையும் பண்பாட்டு நிலையங்களையும் இவ்விருது சிறப்பித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்