நிச்சயமற்ற நிலையும் பிளவுகளும் அதிகரித்துவரும் இன்றைய உலகில், நாடுகள் தங்கள் கதவுகளைத் திறந்துவைத்திருப்பதும், தொடர்புகளை வலுப்படுத்துவதும், பகிரப்பட்ட செழிப்பிற்காக இணைந்து பணியாற்றுவதும் முன்னெப்போதையும்விட அவசியமாகிறது.
இந்த உணர்வுடன்தான் நான் இந்த வாரம் சீனாவிற்குப் பயணம் மேற்கொள்கிறேன். முதலில் ஷென்சென் நகரில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) பொருளியல் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறேன்.
அதனைத் தொடர்ந்து பெய்ஜிங் நகருக்குச் செல்லவிருக்கிறேன். நமது இருதரப்புப் பங்காளித்துவத்தை வலுப்படுத்தவும், மேலும் திறந்தநிலையிலான, ஒன்றிணைந்த, செழிப்பான ஆசிய பசிபிக் வட்டாரத்திற்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்பது குறித்து விவாதிக்கவும் ஆவலுடன் இருக்கிறேன்.
இவ்வாண்டு ஏபெக் கூட்டத்தை ஏற்று நடத்த ஷென்சென் மிகப் பொருத்தமான நகரம். ஒரு சிறிய நகரமாக இருந்த ஷென்சென், சில பத்தாண்டுகளிலேயே தொழில்நுட்பம், புத்தாக்கத்திற்கான உலக மையமாக உருமாறியுள்ளது. சீனாவின் சீர்திருத்தமும் திறந்தநிலைக் கொள்கையும் ஈட்டிய சாதனைகளையும், அந்நாட்டு மக்களின் துடிப்பையும் படைப்பாற்றலையும் இந்த வியத்தகு வளர்ச்சி எடுத்துக்காட்டுகிறது.
ஷென்சென் நகரின் வரலாறு விரிவானதொரு பாடத்தையும் கற்பிக்கிறது. மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, முதலீடுகளை வரவேற்று, உலகத்துடன் இணைவதன் மூலம் நகரங்களும் நாடுகளும் புதிய வாய்ப்புகளை வரவேற்க முடியும். அதன்மூலம் தம் மக்களின் வாழ்க்கையையும் மாற்றியமைக்க முடியும்.
சிங்கப்பூரின் வளர்ச்சியும் இதேபோல் திறந்தநிலைக் கொள்கையாலேயே வடிவமைக்கப்பட்டது. குறைந்த வளங்களைக் கொண்ட சிறிய நாடான நாம், எப்போதும் நமது எல்லைகளுக்கு அப்பால் பார்க்க வேண்டியிருந்தது. உலகச் சந்தைகளுடன் நம்மை இணைத்துக்கொண்டோம். பிறரிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளையும் தேடினோம்.
திறந்தநிலைக் கொள்கை, ஈடுபாடு குறித்த இந்தப் பகிரப்பட்ட மதிப்பே சிங்கப்பூர்-சீனா உறவின் முக்கிய அடித்தளமாக இருந்து வருகிறது.
1990ஆம் ஆண்டில் அரசதந்திர உறவுகள் நிறுவப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நமது நட்பு தொடங்கிவிட்டது. திரு லீ குவான் யூ, திரு டெங் சியாவ்பிங் உள்ளிட்ட முந்தைய தலைமுறைத் தலைவர்கள் நெருக்கமான உறவுகளுக்கு அடித்தளமிட்டனர். இருதரப்பு மரியாதை, நம்பிக்கை, புரிந்துணர்வுடன் அடுத்தடுத்த தலைமுறையினர் இம்முயற்சிகளைக் கட்டியெழுப்பினர்.
அரசதந்திர உறவுகளின் 35வது ஆண்டை நாம் கடந்த ஆண்டு நினைவுகூர்ந்தோம். பல்லாண்டுகாலமாக நமது உறவு நெருக்கமான, ஆழமான பங்காளித்துவமாக வளர்ந்துள்ளது. நான் சீனாவிற்குத் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு, அதன் மாபெரும் வளர்ச்சியையும் உருமாற்றத்தையும் நேரில் கண்டுள்ளேன். சீனாவின் பொருளியல் வளர்ச்சிக்கு ஏற்ப நமது ஒத்துழைப்பும் கூடி வருகிறது.
அரசாங்கங்களுக்கு இடையிலான நமது மூன்று திட்டங்கள் அதனை எடுத்துக்காட்டுகின்றன. தொழில் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க சுஸோவ் தொழிற்பூங்காவுடன் நாம் தொடங்கினோம். பின்னர், நீடித்த நிலைத்தன்மை கொண்ட நகர்ப்புற வாழ்க்கைக்கான புதிய அணுகுமுறைகளை ஆராய தியான்ஜின் சூழலியல் நகரத்தை உருவாக்கினோம். அண்மைக்காலமாக, மேற்குச் சீனாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடையிலான வணிகத்தையும் இணைப்பையும் வலுப்படுத்துவதில் சொங்சிங் இணைப்புத் திட்டம் கவனம் செலுத்தி வருகிறது.
ஒவ்வொரு திட்டமும் அந்தந்தக் காலத்தின் வாய்ப்புகளையும் முன்னுரிமைகளையும் எடுத்துக்காட்டியது. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நமது பங்காளித்துவம் எவ்வாறு தொடர்ந்து தன்னை மாற்றிக்கொண்டது என்பதை அவை கூட்டாகக் காட்டுகின்றன. இருதரப்பினரும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டு, இருதரப்பு நன்மைக்காக ஒத்துழைக்கும் புதிய வழிகளைக் கண்டறிந்துள்ளனர்.
அதேபோல், 2009ஆம் ஆண்டில் நமது இருதரப்புத் தடையற்ற வணிக ஒப்பந்தம் நடப்புக்கு வந்தத முதல், மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப அதனைப் படிப்படியாக மேம்படுத்தியுள்ளோம். இன்று நமது ஒத்துழைப்பு பாரம்பரிய வணிகம், முதலீட்டைத் தாண்டி மின்னிலக்கப் பொருளியல், நீடித்த நிலைத்தன்மை, புத்தாக்கம் போன்ற வளர்ந்துவரும் துறைகளுக்கும் விரிவடைந்துள்ளது.
இணைந்து இன்னும் அதிகமாகச் சாதிக்க பெரிதும் வாய்ப்புள்ளது என நம்புகிறேன்.
உயர்தர வளர்ச்சி, புத்தாக்கம், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து சீனா தனது 15வது ஐந்தாண்டுத் திட்டத்தைத் தொடங்குகிறது. சிங்கப்பூரும் தனது போட்டித்தன்மையை வலுப்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், மக்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்கித் தரவும் ஏதுவாக பொருளியல் உத்தி மறுஆய்வை நிறைவுசெய்துள்ளது.
நமது பொருளியல்கள் அளவிலும் கட்டமைப்பிலும் பெரிதும் வேறுபட்டாலும், நாம் பொதுவான சவால்களை எதிர்கொள்கிறோம். விரைவான தொழில்நுட்ப மாற்றங்களை நாம் கையாள வேண்டும். மூப்படையும் மக்கள்தொகைக்குத் தயாராக வேண்டும். நம் ஊழியர்களை புதிய திறன்களில் தேர்ச்சிமிக்கவர்களாக விளங்கச் செய்யவேண்டும். பசுமையான, நீடித்த நிலைத்தன்மை கொண்ட வளர்ச்சியை நோக்கி மாறவேண்டும். இச்சவால்கள் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளையும் வழங்குகின்றன. குறிப்பாக, தொழில்துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதிலும் வளர்ந்துவரும் பிற தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும் அவை உதவுகின்றன.
நமது பங்காளித்துவம் சிங்கப்பூருக்கும் சீனாவிற்கும் மட்டுமன்றி, பரந்த வட்டாரத்திற்கும் முக்கியமானதாகும்.
ஆசியாவின் வியத்தகு பொருளியல் முன்னேற்றம் திறந்தநிலைக் கொள்கை, வணிகம், முதலீடு, பொருளியல்களுக்கு இடையிலான நெருக்கமான தொடர்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி முறை அதிகரித்துவரும் அழுத்தங்களை எதிர்கொள்கிறது. புவிசார் அரசியல் பதற்றங்கள் தீவிரமடைந்துள்ளன. வணிகத் தடைகள் அதிகரித்துள்ளன. நாடுகள் பொருளியல் பாதுகாப்புக்கும் தங்கள் விநியோகத் தொடர்களின் மீள்திறனுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன.
இந்தக் கவலைகள் புரிந்துகொள்ளக்கூடியவையே. தங்கள் பொருளியல்களைப் பாதுகாக்கவும் இடையூறுகளிலிருந்து மக்களைக் காக்கவும் அரசாங்கங்களுக்குப் பொறுப்பு இருக்கிறது.
ஆனால், திறந்தநிலைக் கொள்கையும் மீள்திறனும் ஒன்றுக்கொன்று எதிரான இலக்குகளாக இருக்க வேண்டியதில்லை. வலுவான, பன்முகப்படுத்தப்பட்ட தொடர்புகள் நமது பொருளியல்களை மேலும் மீள்திறன் கொண்டவையாக மாற்றும். வட்டாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலமும், தெளிவான, கணிக்கக்கூடிய விதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும் அதிர்ச்சிகளை நம்மால் சிறப்பாகத் தாங்கிக்கொள்ள முடியும். அதே வேளையில், புதிய வளர்ச்சி வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.
எனவே, திறந்தநிலையிலான, அனைவரையும் உள்ளடக்கிய, விதிகள் அடிப்படையிலான பொருளியல் கட்டமைப்பிற்கு சிங்கப்பூர் தொடர்ந்து உறுதியான ஆதரவாளராக உள்ளது. வட்டார ஒத்துழைப்பு நாடுகளை எதிரணிகளாகப் பிரிப்பதற்குப் பதிலாக, அவற்றை மேலும் நெருக்கமாகக் கொண்டுவர வேண்டும் என்று நம்புகிறோம்.
அடுத்த ஆண்டு சிங்கப்பூர் ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள நிலையில், வட்டார ஒருங்கிணைப்பை வலுப்படுத்த சக ஆசியான் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம். சீனா உள்ளிட்ட நமது அனைத்துப் பங்காளிகளுடனான ஒத்துழைப்பையும் விரிவுபடுத்துவோம்.
ஆசியானும் சீனாவும் ஏற்கெனவே நெருக்கமான, வலுவான பொருளியல் உறவுகளைக் கொண்டுள்ளன. ஆசியான்-சீனா தடையற்ற வணிக வட்டாரம் அந்த இணைப்புகளை வலுப்படுத்த உதவியுள்ளது. மின்னிலக்க, பசுமைப் பொருளியல்கள், விநியோகத் தொடர் இணைப்பு, புத்தாக்கம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய அதன் அண்மை மேம்பாடு, நம் நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் மேலும் பல வாய்ப்புகளைத் திறந்துவிடும்.
ஒத்துழைப்புக்கான மற்றொரு முக்கியத் தளத்தை ‘ஏபெக்’ வழங்குகிறது. ‘ஒன்றாகச் செழிப்புறுவதற்கான ஆசிய பசிபிக் சமூகத்தைக் கட்டமைத்தல்’ என்ற சீனாவின் இவ்வாண்டு ஏபெக் கருப்பொருள் காலத்திற்கு ஏற்றதாகும்.
திறந்தநிலைக் கொள்கை, புத்தாக்கம், ஒத்துழைப்பு ஆகியவற்றில் அது செலுத்தும் கவனம், நமது வட்டாரம் வளரவும் செழிக்கவும் தேவையானதைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது.
ஷென்சென் நகரில் அர்த்தமுள்ள முடிவுகளை எட்ட சீனாவோடும் மற்ற அனைத்து ‘ஏபெக்’ நாடுகளோடும் இணைந்து பணியாற்ற சிங்கப்பூர் ஆவலுடன் இருக்கிறது. 2030ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ‘ஏபெக்’ தலைமைப் பொறுப்பை ஏற்கும்போது இம்முயற்சிகளை மேலும் முன்னெடுத்துச் செல்வோம்.
பல்லாண்டுகாலமாக சிங்கப்பூரும் சீனாவும் வலுவான பங்காளித்துவத்தைக் கட்டியெழுப்பியுள்ளன. அனைத்துத் துறையிலும் உயர்தர எதிர்கால நோக்கிலான நமது பங்காளித்துவம், நமது ஒத்துழைப்பின் விரிவையும் அதனை மேலும் முன்னெடுத்துச் செல்லும் பகிரப்பட்ட கடப்பாட்டையும் வெளிக்காட்டுகிறது.
உலகில் பிளவுகள் அதிகரித்துவரும் இவ்வேளையில், திறந்தநிலைக் கொள்கை, கலந்துரையாடல், ஒத்துழைப்பு ஆகியவற்றின் நீடித்த மதிப்பை மெய்ப்பிக்க சிங்கப்பூரும் சீனாவும் பிற பங்காளிகளுடன் இணைந்து பணியாற்ற முடியும்.
தடைகளை எழுப்புவதற்குப் பதிலாகத் தொடர்புகளை வலுப்படுத்துவதன்மூலம் மேலும் மீள்திறன்மிக்க, செழிப்பான ஆசிய பசிபிக் வட்டாரத்தைக் கட்டமைக்கவும், நம் மக்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் நம்மால் உதவ முடியும்.
