உலகின் தலைசிறந்த கடல்துறை மையமாக சிங்கப்பூர் 13வது ஆண்டாகத் தேர்வு

உலகின் தலைசிறந்த கடல்துறை மையமாக சிங்கப்பூர் 13வது ஆண்டாகத் தேர்வு

1 mins read
100 என்ற மதிப்பீட்டுக்கு சிங்கப்பூர் 99.32 புள்ளிகளைப் பெற்று முதலிடம்
e1e3cc4d-cd47-4d27-9cac-43391dc73e21
சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் பாசிர் பாஞ்சாங் கப்பல் முணையம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகின் தலைசிறந்த கடல்துறை மையமாக சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சின்ஹுவா-பால்டிக் அனைத்துலக கப்பல் மேம்பாட்டு அமைப்பு கூட்டாகத் தயாரித்து வியாழக்கிழமை (ஜூலை 9) வெளியிட்ட ஐஎஸ்சிடிஐ என்ற (ISCDI Report) அறிக்கையில் சிங்கப்பூர் 100 என்ற மதிப்பீட்டுக்கு 99.32 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை 13வது ஆண்டாக தக்கவைத்துக்கொண்டது.

பிரிட்டனின் நிதி நிறுவனமான பால்டிக் எக்ஸ்சேஞ்ச் நிறுவனமும், சீனாவின் சின்ஹுவா செய்தி ஊடகமும் இணைந்து இந்த தரக் குறியீட்டை வெளியிடுகின்றன.

சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் (MPA) அதன் 30ஆம் ஆண்டு நிறைவை இவ்வாண்டு கொண்டாடும் நிலையில் இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது தனிச்சிறப்பை ஏற்படுத்தியுள்ளது என்று ஆணையம் பெருமிதத்துடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) தெரிவித்தது.

சிங்கப்பூர் அமைந்துள்ள நிலப்பரப்பு, வழங்கும் கடல்துறை சார்ந்த சேவைகள், மாற்று எரிசக்தி மேம்பாட்டுக்கு அளிக்கும் முக்கியத்துவம், தொழில்நுட்ப புத்தாக்கம் போன்ற பல அம்சங்கள் ஆய்வில் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

30 ஆண்டுகள் நற்சேவை

கடந்த 30 ஆண்டுகளாக கடல்துறையைச் சேர்ந்த அமைப்புகளுடன் ஏற்படுத்தியுள்ள நல்லுறவு, வலுவான இணைப்பு, பலதரப்பட்ட சேவைகள், நம்பகத்தன்மை, ஒருங்கிணைந்த செயல்பாடு போன்றவை தரவரிசையில் குடியரசு உச்சத்தை எட்டியதற்கான காரணங்கள் என்று ஆணையம் குறிப்பிட்டது.

“உலகின் முன்னணி கடல்துறை மையமாக சிங்கப்பூர் அங்கீகரிக்கப்பட்டதை எண்ணி நாங்கள் பெருமைகொள்கிறோம்.” என்று ஆணையத்தின் தலைமை நிர்வாகி ஆங் வீ கியோங் தெரிவித்தார்.

ஜுன் மாதம் சீனாவின் ஷாங்காய் நகரில் உலகின் தலைசிறந்த துறைமுகமாக சிங்கப்பூர் ஆங்கீகரிக்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
கடல்துறைதுறைமுகம்ஆணையம்மையம்கடல்சேவை

தொடர்புடைய செய்திகள்