தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சில மோசடி குற்றங்களுக்குப் பிரம்படி விதிக்க பரிசீலனை

2 mins read
25c61e8f-6aa5-4c35-9676-9354a56c0042
2024ஆம் ஆண்டில் பதிவான மோசடி சம்பவங்களால் 1.1 பில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் அரசாங்கம் மோசடி தொடர்பான சில குற்றங்களுக்குப் பிரம்படி விதிக்கப் பரிசீலித்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) உள்துறை அமைச்சுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் இது குறித்துப் பேசினார்.

ஜூரோங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டான் வு மெங் கடுமையான மோசடி குற்றங்களுக்குப் பிரம்படிகள் விதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த திருவாட்டி ஷுவெலிங், “டாக்டர் டானின் ஆலோசனை கருத்தில்கொள்ளப்படும், சில மோசடி குற்றங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் கடுமையாக உள்ளன. அந்தக் குற்றங்களுக்குச் சிறைத் தண்டனையை அதிகரிப்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது ” என்று தெரிவித்தார்.

மோசடிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் திருவாட்டி ஷுவெலிங் தெரிவித்தார்.

சிம் அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது, வெளிநாட்டில் இருந்து வரும் குறுஞ்செய்திகள், அழைப்புகளை தடுப்பது, மோசடிகளுக்கு வங்கிக் கணக்கைக் கொடுத்து உதவுபவர்களுக்குத் தண்டனை உள்ளிட்டவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று திருவாட்டி ஷுவெலிங் விவரித்தார்.

டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடக செயலிகள் மூலம் ஏமாற்றப்படும் செயல்களைத் தடுப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

“கிளமெண்டியில் உள்ள குடியிருப்பாளர் ஒருவர் மோசடியால் பாதிக்கப்பட்டார். அவரது மொத்தச் சேமிப்பும் ஏமாற்றப்பட்டது. இதனால் அவர் நொடிந்துபோனார். அப்பெண்ணின் வேலை பறிபோகும் சூழலும் உருவாகியுள்ளது,” என்று டாக்டர் டான் திங்கட்கிழமை (மார்ச் 3) நாடாளுமன்றத்தில் கூறினார்.

இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுவோர் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்று திரு டான் கேள்வி கேட்டார்.

சட்டவிரோதமாகக் கடன் வழங்கும் சேவை வழங்குபவர்களுக்கு வங்கிக் கணக்குகளைக் கொடுத்து உதவுபவர்களுக்கு 300,000 வெள்ளி வரையிலான அபராதம், அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் சிறை, 6 பிரம்படிகள் ஆகியவை தண்டனையாக விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய டாக்டர் டான், மோசடி குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் கடுமையாகத் தண்டனை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கடன் முதலைக்குத் தொடர்புடைய 10,000 வெள்ளி ரொக்கத்தைக் கையாள்பவருக்குப் பிரம்படி விதிக்கப்படுகிறது, ஆனால் 100,000 வெள்ளி மோசடி செய்பவருக்குப் பிரம்படி இல்லை என்று திரு டான் குறிப்பிட்டார்.

2024ஆம் ஆண்டில் பதிவான மோசடி சம்பவங்களால் 1.1 பில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டது. சிங்கப்பூர் வரலாற்றில் முதல்முறையாக மோசடியால் ஏமாற்றப்பட்ட தொகை 1 பில்லியன் வெள்ளியைத் தாண்டியது.

குறிப்புச் சொற்கள்
நிதி மோசடிமோசடிபிரம்படி