சிங்கப்பூர், அதன் நீர் விநியோகத்தை தடையில்லாமல் பாதுகாக்க 6வது நீர் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது.
அதற்கான ஆய்வை மேற்கொள்ள வெள்ளிக்கிழமை அன்று (டிசம்பர் 26) ஒப்பந்தக் குத்தகையை பொதுப் பயனீட்டுக் கழகம் (பியூபி) வெளியிட்டது.
இந்த ஆய்வு முடிவடைய பத்து மாதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடல் நீர், நன்னீர் இரண்டையும் சுத்திகரிக்கக்கூடிய ஆலையை நிறுவுவது குறித்து மதிப்பிடப்படும்.
ஏற்கெனவே உள்ள மரினா ஈஸ்ட் நீர் சுத்திகரிப்பு ஆலை, கடல் நீரையும் நன்னீரையும் சுத்திகரிக்கக் கூடியது.
இதே போன்ற மற்றொரு நீர் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பது சிங்கப்பூரின் நோக்கம் என்று பியூபி தனது அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
இந்த ஆய்வில், பல்வேறு ஆலை வடிவமைப்பு, அவற்றின் தொழில்நுட்ப சாத்தியக்கூறு உள்ளிட்டவை மதிப்பிடப்படும்.
அது மட்டுமல்லாமல், நிலப்பற்றாக்குறை உள்ள சிங்கப்பூரில் நிலப்பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்நோக்கு வடிவமைப்பு பரிசீலிக்கப்படும்.
“இது, ஏற்கெனவே உள்ள நீர் ஆலைகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை ஒத்து இருக்கும். உயர் மாடிகளையும் நிலத்தடித் தளங்களையும் நீர் சுத்திகரிப்பு ஆலை வசதிகளுடன் இணைப்பது இவற்றில் உள்ளடங்கும்,” என்று பியூபி கூறியது.
தொடர்புடைய செய்திகள்
உதாரணமாக, மரினா ஈஸ்ட் நீர் சுத்திகரிப்பு ஆலையில் நீர் சுத்திகரிப்பு வசதிகள் நீலத்தடியில் இடம்பெற்றுள்ளன.
ஜூரோங் தீவில் உள்ள நீர் ஆலை, துவாஸ் பவரின் தெம்புசு பல பயன்பாட்டு வளாகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான நீராலைகளைவிட ஐந்து விழுக்காடு மின்சாரம் சேமிக்க முடிகிறது.
இரண்டு நீராலைகளுக்கும் கடல் நீரை உள்ளே செலுத்துவதற்கும் நீரை வெளியேற்றுவதற்கும் பகிர்ந்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. துவாஸ் பவர் வளாகத்தில் உற்பத்தி செய்யப்டும் மின்சாரம், நீரை சுத்திகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இத்தகைய ஏற்பாடுகளால், ஆயிரம் வீவக வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை சேமிக்க முடிவதாக பியூபி சுட்டிக்காட்டியது.
சிங்கப்பூர், தண்ணீருக்கு நான்குவிதமான வளங்களை நம்பியிருக்கிறது. அவற்றில் இரண்டு, நீர்ப் பிடிப்பு பகுதிகளில் எவ்வளவு மழை பெய்கிறது என்பதைப் பொறுத்தது.
மலேசியாவின் ஜோகூர் ஆற்றிலிருந்து நீரை இறக்குமதி செய்வதும் இதில் அடங்கும். சிங்கப்பூர் நீர்வழி, நீர்த்தேக்கங்களில் சேகரிக்கப்படும் மழை நீர் மற்றொரு ஆதாரமாக உள்ளது.
ஆனால் பருவநிலை மாற்றத்தால் நீர் விநியோகம் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து உள்ளது.
பயன்படுத்தப்பட்ட நீரும் நியூவாட்டர் ஆலை மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

