சிங்கப்பூரில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்று ரஜினியின் ‘கூலி’ படத்தைக் காண தனது தமிழ் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்குவதாக அறிவித்து உள்ளது.
மேலும், முதல் நாள் முதல் காட்சியைக் காண்பதற்கான நுழைவுச்சீட்டையும் பொழுதுபோக்குச் செலவுக்காக 30 வெள்ளி பணத்தையும் அந்த ஊழியர்களுக்கு அளிக்க இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
‘ஃபார்மர் கன்ஸ்ட்ரக்ஷன்’ எனப்படும் அந்நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கை சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்தியாவிலும் பிற நாடுகளிலும் உள்ள ஊடகங்கள் அந்தச் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி சிங்கப்பூர் நிறுவனத்தின் சலுகைகளை வெளியிட்டுள்ளன.
பாலஸ்தியர் ரோடு முகவரியைத் தாங்கிய அந்நிறுவனத்தின் சுற்றறிக்கை இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் வெளியாகிறது.
சிங்கப்பூரில் அந்தப் படத்தைக் காண்பதற்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு மூன்றே நிமிடங்களில் முடிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.