சிங்கப்பூர் தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்கும் இடமாக விளங்குகிறது: அமைச்சர் கான்

2 mins read
ஆண்டின் முற்பாதியில் $5.4 பில்லியன் முதலீடுகளை ஈர்த்துள்ளது
9f632448-fffb-4186-979d-2e6e31b002c5
2024ன் முற்பாதியில் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் $5.4 பில்லியன் வர்த்தகச் சொத்து முதலீடுகளை ஈர்த்துள்ளது. - கோப்புப் படம்: சாவ் பாவ்

உலகளாவிய நிலையில் நிறுவனச் செயல்பாட்டுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டபோதும் சிங்கப்பூர் தொடர்ந்து வலுவான முதலீடுகளை ஈர்த்துவருகிறது.

இந்த ஆண்டின் (2024) முற்பாதியில் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் $5.4 பில்லியன் வர்த்தகச் சொத்து முதலீடுகளை (FAI) ஈர்த்துள்ளது.

இந்த ஆண்டுக்கான கழகத்தின் முதலீட்டு இலக்கு $8 முதல் $10 பில்லியன் ஆகும். கழகம் அந்த இலக்கை எட்டிவிடும் என்பதை முற்பாதி முதலீடுகள் காட்டுவதாகத் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் அக்டோபர் 14ஆம் தேதி கூறினார்.

சென்ற ஆண்டு கழகம் $12.7 பில்லியன் மதிப்பிலான வர்த்தகச் சொத்து முதலீடுகளை ஈர்த்தது. அதற்கு முந்தைய ஆண்டு சாதனை அளவாக $22.5 பில்லியன் மதிப்பிலான அத்தகைய முதலீடுகளை ஈர்த்தது. பகுதி மின்கடத்தித் துறை முதலீடுகள் அதிகரித்தது அதற்குக் காரணம்.

இயோ சூ காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹொன் வெங்கின் கேள்விக்கு அவர் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

பன்னாட்டு நிறுவனங்கள் இடம்பெயர்வது அல்லது சிங்கப்பூரில் ஆட்குறைப்பை அறிவிப்பது குறித்தும் நிறுவனங்களின் இத்தகைய முடிவுகளையும் அவை தொடர்பான கவலைகளையும் குறித்துத் திரு யிப் கேள்வி எழுப்பினார்.

இந்த ஆண்டு தொழில்நுட்பப் பெருநிறுவனங்களான டைசன், சம்சுங் எலக்ட்ரானிக்ஸ், அமேசான், கூகல் போன்றவை சிங்கப்பூர் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தன.

திரு கான் தமது பதிலில், “சிங்கப்பூர் தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்கும் இடமாக விளங்குகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய உத்திகளில் ஏற்படும் மாற்றம் அல்லது சந்தை மாற்றத்திற்கேற்ப பன்னாட்டு நிறுவனங்கள் சிங்கப்பூரில் செயல்பாட்டைக் குறைக்கவோ இங்கிருந்து வெளியேறவோ முற்பட்டிருக்கக்கூடும் என்றார் அவர்.

இத்தகைய சூழல்களில் அரசாங்கம் அந்த நிறுவனங்களுடனும் தொழிற்சங்கங்களுடனும் அணுக்கமாகப் பணியாற்றி ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்கும் வேலைதேடித்தருவதற்கும் உதவுவதாக அமைச்சர் கூறினார்.

கடந்த மே மாதம் மேகக் கணிமைச் சேவை வழங்கும் அமேசான் வெப் சர்விசஸ் நிறுவனமும் மருந்துப்பொருள் தயாரிக்கும் அஸ்ட்ராஸெனக்கா நிறுவனமும் சிங்கப்பூரில் மிகப் பெரிய முதலீடுகள் குறித்து அறிவித்தன.

அமேசான் அடுத்த நான்கு ஆண்டுகளில் மேகக் கணிமை, செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புக்கு $12 பில்லியனை முதலீடு செய்யக் கடப்பாடு தெரிவித்தது. அஸ்ட்ராஸெனக்கா $2 பில்லியன் மதிப்பில் புற்றுநோய்க்கான மருந்துத் தயாரிப்பு ஆலையைக் கட்ட உறுதியளித்தது.

இந்த முதலீடுகளால் சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதைத் திரு கான் சுட்டினார். மாதச் சம்பளமாக $12,500க்குமேல் ஈட்டும் சிங்கப்பூரர்களில் ஏறத்தாழ 60 விழுக்காட்டினர் வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்