தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சக்திவாய்ந்த கடப்பிதழ்: சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடம், அமெரிக்கா பின்னடைவு

2 mins read
75de7058-c760-4b83-8975-a7e30687bc42
சிங்கப்பூர்க் கடப்பிதழ் தொடர்ந்து உலகின் ஆக சக்திவாய்ந்த கடப்பிதழாகத் திகழ்கிறது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகின் ஆக சக்திவாய்ந்த கடப்பிதழ்களுக்கான பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

ஹென்லி கடப்பிதழ் குறியீடு அண்மையில் வெளியிட்ட பட்டியல்மூலம் அது தெரியவந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்கக் கடப்பிதழ் பட்டியலின் முதல் பத்து இடங்களிலிருந்து வெளியேறியுள்ளது. பட்டியலில் அமெரிக்கக் கடப்பிதழுக்குக் கிடைத்த இடம் 12. மலேசியக் கடப்பிதழுக்கும் அதே இடம்தான்.

அமெரிக்கக் கடப்பிதழைக் கொண்டு 227 இடங்களில் 180 இடங்களுக்கு மட்டுமே விசா இன்றி பயணம் செய்ய முடியும்.

சிங்கப்பூர்க் கடப்பிதழைக் கொண்டு 193 இடங்களுக்கு விசா இன்றிச் சென்றுவர முடியும்.

190 இடங்களுக்கு விசா இன்றிச் சென்றுவர வகை செய்யும் தென்கொரியக் கடப்பிதழ் சக்திவாய்ந்த கடப்பிதழ்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

மூன்றாம் இடத்தை ஜப்பானின் கடப்பிதழ் பிடித்தது. ஜப்பான் கடப்பிதழ் மூலம் 180 இடங்களுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ள முடியும்.

2014ஆம் ஆண்டு முதல் இடத்தில் இருந்த அமெரிக்கக் கடப்பிதழ் அதன் வலிமையைக் கடந்த சில ஆண்டுகளில் படிப்படியாக இழந்தது. அண்மைப் பட்டியலில் அமெரிக்கக் கடப்பிதழுக்குக் கிடைத்த 12வது இடம் இதுவரை கிடைத்த இடங்களில் ஆகக் குறைவானது.

வெளிப்படைத்தன்மையையும் ஒத்துழைப்பையும் அரவணைக்கும் நாடுகள் பட்டியலில் முன்னேறுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிவதைப் பட்டியல் சுட்டுவதாக ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம் குறிப்பிட்டது.

கடந்தகாலச் சலுகைகளை நம்பியிருக்கும் நாடுகள் பின்தங்குவதாகவும் அது சொன்னது.

ஏப்ரல் மாதத்தில் பிரேசிலுக்கு விசா இன்றிப் பயணம் மேற்கொள்வதற்கான சலுகையை அமெரிக்கா இழந்தது. விசா இன்றிப் பயணம் செய்வதை அனுமதிக்கும் சீனாவின் பட்டியலிலிருந்தும் அமெரிக்கா விடுபட்டது.

பாப்புவா நியூ கினி, மியன்மார் நாடுகளும் அமெரிக்கக் கடப்பிதழுக்கான தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டன.

பட்டியலில் இந்தியக் கடப்பிதழுக்கு 85வது இடம் கிடைத்துள்ளது. இந்தியக் கடப்பிதழ் வைத்திருப்போர் 57 இடங்களுக்கு விசா இன்றிப் பயணம் செய்ய முடியும்.

குறிப்புச் சொற்கள்