அனைத்துலகக் கரிம வர்த்தகத்தை ஊக்குவிக்க சிங்கப்பூர் $19.2 மி. பங்களிப்பு

அனைத்துலகக் கரிம வர்த்தகத்தை ஊக்குவிக்க சிங்கப்பூர் $19.2 மி. பங்களிப்பு

2 mins read
50cdd3c0-e840-40b5-82b2-91ed1b849d5a
ஜென்ஜீரோ பருவநிலை உச்சநிலைக் கூட்டத்தில் உரையாற்றிய வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அனைத்துலக கரிம வர்த்தகத்தை நடைமுறை சார்ந்த ஒன்றாக மாற்றி ஊக்குவிக்கும் நடவடிக்கைக்கு உதவ சிங்கப்பூர் US$15 மில்லியனை (S$19.2 மில்லியன்) வழங்க உள்ளது.

அதிகரித்து வரும் பொருளியல் நெருக்கடி மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக எழுந்துள்ள நிச்சயமற்ற போக்கு ஆகியவற்றுக்கு மத்தியில் அந்த நிதி உதவியை சிங்கப்பூர் மேற்கொள்ளும்.

அவ்வாறு செய்வதன் மூலம், ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தரநிலைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய கரிமக் கடன் திட்டங்களை ஆதரித்து நிதியளிக்கும் அமைப்பான பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் முயற்சிகளுக்குப் பங்களிக்கும் முதல் ஆசிய நாடாக சிங்கப்பூர் இடம்பெறும்.

அந்தப் பங்களிப்புக்கான அறிவிப்பை வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் செவ்வாய்க்கிழமை (மே 19) வெளியிட்டார்.

அப்போது உரையாற்றிய அவர், “பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தைத் தாமதப்படுத்துவதற்கான சவால்களை, மத்திய கிழக்கில் தொடரும் மோதல் மேலும் சிக்கலாக்கியுள்ளது. அத்துடன், உலகளாவிய எரிசக்திச் சந்தைகளை அது சீர்குலைத்துள்ளது,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இதுபோன்ற நெருக்கடிகளைச் சமாளிப்பதில் ஏற்படும் செயலற்ற போக்கும் தாமதத்தின் விளைவுகளும் இனிவரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்பதால் பருவநிலை செயல்பாடுகளில் முன்னேற்றம் தொடர வேண்டும்.

“தூய்மை எரிசக்திக் கட்டமைப்பு, மாசுபடுத்தும் புதைபடிவ எரிபொருள் சந்தைகளின் நிலையற்ற தன்மையிலிருந்து அரசாங்கங்களைப் பாதுகாக்கும் என்பதால் அந்த முன்னேற்றம் அவசியம்,” என்றார்.

நான்காவது ஜென்ஜீரோ பருவநிலை உச்சநிலை மாநாட்டில் பங்கேற்று திரு டான் பேசினார்.

புவியை வெப்பமயமாக்கும் உமிழ்வுகளை ஈடுசெய்ய, கடன் வாங்க அனுமதிக்கும் கரிமச் சந்தைகளை உருவாக்கும் விதமாக, இந்த மாநாடு ஆண்டுதோறும் உலகத் தலைவர்களை ஒன்றிணைக்கிறது.

திறன்மிகு கரிமச் சந்தைகள், புவியை வெப்பமயமாக்கும் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கடுமையாகக் குறைப்பதில் அத்தியாவசியப் பங்கை வகிக்கின்றன.

உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்துலக பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், நாடுகள் தங்கள் உள்நாட்டுப் பருவநிலை இலக்குகளை அடைய கரிமக் கடன்களை வாங்கிக்கொள்ள முடியும்.

கரிமச் சந்தைகள் கரிமக் கடன் வாங்குவோருக்கு உதவிபுரிகின்றன.

செலவு, மூலதனம் மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகிய தடைகளைக் களைவதன் மூலம், சிதறுண்ட கரிமச் சந்தையில் ஒரு பரந்த, அனைத்துலக ஒருங்கிணைப்பை உருவாக்குவதில் சிங்கப்பூர் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் திரு டான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்