ஜூலை மாத பணவீக்கம் எதிர்பார்த்ததற்கு மேலாக 2.5 விழுக்காடாகக் குறைந்தது

2 mins read
4df75dd3-8599-4046-824a-75f4cc556b04
ஜூலை மாத மூலாதாரப் பணவீக்கம் எதிர்பார்த்ததற்கும் மேலாக 2.5 விழுக்காடுக்கு குறைந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விலைவாசி உயர்வு பரவலாக குறைந்துள்ளதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் ஜூலை மாத மூலாதாரப் பணவீக்கம் எதிர்பார்த்ததற்கும் மேலாக குறைந்திருக்கிறது.

குடும்பங்களின் செலவினத்தை மேலும் தெளிவாக பிரதிபலிக்கும் வகையில் மூலாதாரப் பணவீக்கத்தைக் கணக்கிடும்போது தனியார் போக்குவரத்துச் செலவு, வசிப்பிடச் செலவு ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. இந்நிலையில், ஆண்டு அடிப்படையில் ஜூலை மாத மூலாதாரப் பணவீக்கம் 2.5 விழுக்காடாக வீழ்ந்துள்ளது. இது பகுப்பாய்வாளர்களின் எதிர்பார்ப்பான 2.9 விழுக்காட்டுக்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இது 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாத மூலாதாரப் பணவீக்க விகிதமான 2.2 விழுக்காட்டுக்குப் பிறகு ஆகக் குறைவு என்பது கவனிக்கத்தக்கது. அத்துடன், ஜூன் மாத 2.9 விழுக்காட்டையும் கணக்கில் கொண்டால் தொடர்ந்து இரண்டாவது மாதமாக மூலாதாரப் பணவீக்கம் குறைந்துள்ளது.

வசிப்பிடச் செலவினம் குறைந்து வருவதால் ஒட்டுமொத்த பணவீக்கம் ஜூன் மாத விகிதமான 2.4 விழுக்காட்டிலிருந்து ஜூலை மாதத்தில் மாற்றமில்லை. மேலும், பகுப்பாய்வாளர்களின் கணிப்பான 2.5 விழுக்காட்டைவிட இது குறைவு என்று கூறப்பட்டுள்ளது.

மாத அடிப்படையில் மூலாதாரப் பணவீக்கம் 0.1 விழுக்காடு குறைந்தது என்றும் ஒட்டுமொத்த பணவீக்கம் 0.3 விழுக்காடு குறைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு முழுக்க மூலாதாரப் பணவீக்கம் 2.5 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காடு என்ற வரையறையில் இருக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23ஆம் தேதி) அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறுன. அதே அறிக்கையில் ஒட்டுமொத்த பணவீக்கம் 2லிருந்து 3 விழுக்காடு வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணிப்பு கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி இவ்வாண்டு ஒட்டுமொத்த பணவீக்கம் 2லிருந்து 3 விழுக்காடு வரை இருக்கும் என்ற சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் கணிப்புடன் ஒத்துப்போவது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்