சிங்கப்பூரில் உள்ள பல் மருத்துவர்கள் பற்சிதைவுகளை நிரப்பும் பணிகளில் பாதரசத்தின் பயன்பாட்டை படிப்படியாகக் குறைப்பார்கள் என்றும் அதன் பயன்பாட்டை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவர மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதைந்த பற்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவும் அவற்றை அழகுபடுத்தவும் பயன்படுத்தும் பொருள்களில் கலப்பு பிசின், பீங்கான் மற்றும் கண்ணாடி அயனோமர் போன்றவை முதல் சில தெரிவுகளாகும்.
இருப்பினும், கடந்த 175 ஆண்டுகளில் பற்சிதைவுகளை நிரப்பப் பாதரச ரசக்கலவை அதிகம் பயன்படுத்தப்படுவதாகப் பல் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பற்களை உலர வைப்பது கடினமாக இருக்கும், ஆழமான துவாரங்களை நிரப்புவதற்கு பாதரச ரசக்கலவை சிறந்தவை என்று அவர்கள் கூறினர்.
பயன்படுத்தப்படும் பல்மருத்துவ ரசக்கலவைகளில் 50 விழுக்காடு பாதரசமாகும்.
பற்சிதைவுகளை நிரப்பும் பணிகளின்போது அவை ஈரப்பதத்தால் அவ்வளவாகப் பாதிப்படைவதில்லை.
இந்நிலையில், நவம்பர் மாதத்தில் உலக சுகாதார நிறுவனம் ஒரு கோரிக்கையை விடுத்தது. 2034ஆம் ஆண்டுக்குள் பற்சிதைவுகளைச் சரிசெய்யும் பணிகளில் பாதரசம் சார்ந்த ரசக்கலவைகளைப் படிப்படியாக நீக்க வேண்டும் என்று அது அழைப்பு விடுத்தது.
இது உலகளாவிய நிலையில் பல் மருத்துவத்தை மாற்றி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
பாதரசம் நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும் அது உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்றும் உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.
பல்சிதைவுகளில் பாதரசத்தை நிரப்புவுதைப் படிப்படியாக நிறுத்தினால் பாதரச வெளியேற்றத்திலிருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கலாம் என்று அது கூறியது.
நாட்டின் பல் மருத்துவ சமூகம் உலகளாவிய அணுகுமுறையுடன் இணைந்திருப்பதாகச் சிங்கப்பூர் பல் மருத்துவச் சங்கம் கூறியது.
இருப்பினும், பாதரசக்கலவை இன்றும் பயன்பாட்டில் உள்ளதாக அது கூறியது.
பாதரசத்தின் பயன்பாடு குறைக்கப்படும்போதிலும் நோயாளிகள் தொடர்ந்து பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் பொருத்தமான பராமரிப்பைப் பெறுவது உறுதி செய்யப்படுவதாக சங்கம் தெரிவித்தது.

