$8.5 பில்லியன் ஜிஎஸ்டி வசூலித்த சிங்கப்பூர் சுங்கத்துறை

2 mins read
8287f472-e198-4633-93b3-f18a242e77fb
பொருள் சேவை வரியைத் தவிர்த்து, புகையிலைக்காக $1.1 பில்லியன் வரி, மதுபானத்துக்காக $775.9 மில்லியன் வரியை சிங்கப்பூர் சுங்கத்துறை 2024ஆம் ஆண்டில் வசூலித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் சுங்கத்துறை 2024ஆம் ஆண்டில் $8.5 பில்லியனுக்கும் அதிகமான பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) வசூலித்தது.

2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது $1 பில்லியனுக்கும் அதிகமான ஏற்றம்.

இதுவே சிங்கப்பூர் சுங்கத்துறை வசூலித்துள்ள ஆக அதிகமான பொருள் சேவை வரி.

அரசாங்கத் தரவு இணையவாசல் Data.gov.sg மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.

2013ஆம் ஆண்டிலிருந்து அது இப்புள்ளிவிவரங்களைக் கண்காணித்து வருகிறது.

2013ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சுங்கத்துறை $5.5 பில்லியன் மதிக்கத்தக்க பொருள் சேவை வரி வசூலித்தது.

2023ஆம் ஆண்டில் பொருள் சேவை வரி விகிதம் அதிகரித்தபோது $7.3 பில்லியன் பெறுமானமுள்ள ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டது.

வசூலிக்கப்பட்ட பொருள் சேவை வரியில் பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுடன் தொடர்புடையவை.

உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுடன் தொடர்புடைய ஜிஎஸ்டி வசூல் 1 விழுக்காட்டுக்கும் குறைவு.

2023ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி விகிதம் 7 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாக உயர்ந்தது.

2024ஆம் ஆண்டில் அது 9 விழுக்காடாக ஏற்றம் கண்டது.

2024ஆம் ஆண்டில் சிங்கப்பூர் $20.6 பில்லியன் பெறுமானமுள்ள பொருள் சேவை வரியை வசூலித்தது.

2030ஆம் ஆண்டு வரை பொருள் சேவை வரியை மேலும் உயர்த்தும் தேவையில்லை என்று பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

பொருள் சேவை வரியைத் தவிர்த்து, புகையிலைக்காக $1.1 பில்லியன் வரி, மதுபானத்துக்காக $775.9 மில்லியன் வரியை சிங்கப்பூர் சுங்கத்துறை 2024ஆம் ஆண்டில் வசூலித்தது.

புகையிலை, மதுபானம் தொடர்பான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் அது கூறியது.

புகையிலை தொடர்பான குற்றச் செயல்கள் 2024ஆம் ஆண்டில் ஏறத்தாழ 40 விழுக்காடு அதிகரித்தது.

2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் மதுபானம் தொடர்பான குற்றச் செயல்கள் 80 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்தது.

2024ஆம் ஆண்டில் பொருள் சேவை வரி தொடர்பான குற்றங்கள் சற்று அதிகரித்தன.

குறிப்புச் சொற்கள்
பொருள் சேவை வரிமதுபானம்புகையிலை