சுங்கத்துறை தனது பெயரைப் பயன்படுத்தி வரும் மோசடி வலையில் வீழ்ந்துவிட வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இது குறித்த ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் ‘எஸ்ஜி கஸ்டம்ஸ்’ (S.G. Customs) என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு குறுந்தகவல் வலம் வந்துகொண்டிருப்பதாக அது கூறியது.
சிங்கப்பூர் சுங்கத்துறை ‘எஸ்ஜி கஸ்டம்ஸ்’ என்ற அடைமொழியையோ அல்லது சமூக ஊடகங்களில் அதன் மாற்று வடிவங்களையோ பயன்படுத்துவது இல்லை என்று அது தெளிவுபடுத்தியது.
தொடர்ந்து விளக்கமளித்த அந்த அமைப்பு, ஜூலை 1ஆம் தேதியிலிருந்து பொதுமக்களுக்கு வெவ்வேறு அமைப்புகளிலிருந்து தனித்தனி அடையாளத்துடன் குறுந்தகவல் வராது என்று தெரிவித்தது. மாறாக, அரசு அமைப்புகளிலிருந்து ‘கவ்.எஸ்ஜி’ (‘gov.sg’) என்ற ஒரே குறுந்தகவல் அடையாளத்துடன் குறுந்தகவல்கள் வருவதை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் சுங்கத்துறை கூறியது.
மோசடிக் குறுந்தகவல்கள் சந்தேகப்படும்படியான தொடர்புடன் வருவதாகக் கூறிய சுங்கத்துறை, அது பொதுமக்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டால் மட்டுமே அவர்களுக்கு வந்திருக்கும் பொட்டலங்களை விடுவிக்க முடியும் என்று கூறுகிறது.
இதுபற்றிக் கூறிய அந்த அமைப்பு, பொட்டலங்களைப் பெறுவோரின் தனிப்பட்ட தகவல்களைத் தான் கேட்பதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

