தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு குறைப்பு

3 mins read
443cc61f-1251-41a9-9934-0494e63fe70a
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 விழுக்காட்டுக்கும் 1.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் இவ்வாண்டுக்கான அதன் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பைக் குறைத்துள்ளது.

உற்பத்தித் துறை மெதுவடையும் என்று கணிக்கப்படும் நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 விழுக்காட்டுக்கும் 1.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இவ்வாண்டில் பொருளியல் வளர்ச்சி 0.5 விழுக்காட்டுக்கும் 2.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக, தொழில் அமைச்சு கணித்திருந்தது.

பொருளியல் ஆண்டு அடிப்படையில் 0.7 விழுக்காடும், காலாண்டு அடிப்படையில் 0.3 விழுக்காடும் கூடியது என்று அமைச்சு ஜூலையில் தனது முன்னோடி மதிப்பீட்டில் தெரிவித்தது.

ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி விகிதம் சராசரியாக ஏறக்குறைய 0.4 விழுக்காடாகப் பதிவானதால், புதிய முன்னுரைப்புப்படி, முதல் ஆறு மாதங்களைக் காட்டிலும் ஆண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சின் தலைமைப் பொருளியலாளர் யோங் யிக் வேய் கூறினார்.

வெள்ளிக்கிழமை காலை, சிங்கப்பூர் இவ்வாண்டுக்கான அதன் ஏற்றுமதி முன்னுரைப்புகளையும் குறைத்துள்ளது.

உற்பத்தித் துறை ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் ஆண்டு அடிப்படையில் 7.3 விழுக்காடு சரிந்ததாக அமைச்சு கூறியது. அதற்கு முந்திய காலாண்டில் அது 5.4 விழுக்காடு சுருங்கியது.

இதற்கிடையே, உற்பத்தியும் எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்தி விகிதமும் கடந்த ஒன்பது மாதங்களாகக் குறைந்து வந்துள்ளன.

இவ்வாண்டு இனியும் சிங்கப்பூரின் உற்பத்தித் துறை தொடர்ந்து மெதுவடையும் என்று அமைச்சு கூறியது.

நிதி, காப்புறுதித் துறைகளும் மெதுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், பயணத்துறை, சில்லறை விற்பனை, உணவு, பானச் சேவைத் துறைகள் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.

இதனிடையே, உலகப் பொருளியல் நிலவரங்களைப் பார்க்கும்போது இறங்குமுக ஆபத்து தொடர்ந்து இருந்து வருவதாக அமைச்சு கூறியது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருக்கக்கூடும்.

அதன் விளைவாக உலகளவில் செலவினங்கள் குறையக்கூடும். உக்ரேனில் போர் தீவிரமடையும் வாய்ப்பும் இருக்கிறது.

பெரும் வல்லரசுகளுக்கு இடையே புவிசார் அரசியல் பதற்றங்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன. இவை அனைத்தையும் அமைச்சு சுட்டியது.

சிங்கப்பூரில் விலைவாசி ஆண்டுக்காண்டு அடிப்படையில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 5.1% கூடியது. இது அதற்கு முந்திய காலாண்டில் 6.1% ஆக இருந்தது.

பணவீக்கம் பற்றி கருத்து கூறிய சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் துணை நிர்வாக இயக்குநர் எட்வர்ட் ராபின்சன், “ஒட்டுமொத்த பணவீக்கம் 4.5% முதல் 5.5% வரை இருக்கும் என்றும் மூலாதாரப் பணவீக்கம் 2.5% முதல் 3% வரை இருக்கும் என்றும் மத்திய வங்கி கணித்து இருக்கிறது. இதில் இப்போதைக்கு மாற்றம் எதுவுமில்லை,” என்று தெரிவித்தார்.

இந்த இருவகைப் பணவீக்கமும் உச்ச அளவைத் தொட்டு, படிப்படியாக இறங்கத் தொடங்கி இருப்பதாகத் தெரிகிறது என்றும் இது தொடரும் என்றும் அவர் கூறினார்.

இந்தச் சூழலில் இந்த ஆணையத்தின் நாணயக் கொள்கை ஏற்புடைய ஒன்றாகவே தொடர்கிறது என்றாரவர்.

இதனிடையே, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வர்த்தக, தொழில் அமைச்சின் நிரந்தரச் செயலாளர் கேப்ரியல் லிம், அண்மையில் எண்ணெய், உணவு தானிய விலைகள் உயர்ந்ததை அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது என்று தெரிவித்தார்.

“இதை நாங்கள் தொடர்ந்து மிகக் கவனமாகக் கண்காணித்து வருவோம். தேவை எனில் மேலும் உதவிகளை அமல்படுத்த தயாராக இருக்கிறோம்,’’ என்றாரவர்.

குறிப்புச் சொற்கள்