அதிகமான தொழில்நுட்பங்கள் மேகக் கணிமைக்கு (கிளவுட்) இடம்பெயர்கின்றன. அதாவது, அவற்றின் தரவு தனிப்பட்ட சாதனங்களில் இல்லாமல் தொலை சேவையகங்களில் சேர்க்கப்படுகிறது. மேலும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) ஒருங்கிணைத்து, புதிய வகையான தீங்கிழைக்கும் தாக்குதல்களைச் சமாளிக்க உதவுகிறது.
இந்த வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சிங்கப்பூரின் திறனை மேம்படுத்த, சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த வீரர்களும் பல்வேறு நிறுவனங்களின் முக்கிய தொழில்துறைகளைச் சேர்ந்த பொதுமக்கள் நவம்பர் 12 முதல் நவம்பர் 15 வரை மூன்று நாள் பயிற்சியில் பங்கேற்றனர்.
மேகக் கணிமை, ஏஐ தொழில்நுட்பம், ஆறு முக்கியச் சேவைகளான மின்சாரம், நீர், எரிவாயுக் குழாய்கள், 5ஜி கட்டமைப்பு, விமான நிலையங்கள், ரயில் அமைப்பு ஆகியவற்றில் இயங்கும் ஓர் அமைப்புக்கான அச்சுறுத்தல்களை அவர்கள் கண்டறிந்து நிறுத்த வேண்டியிருந்தது.
சிங்கப்பூர் ஆயுதப் படையின் மின்னிலக்க மற்றும் உளவியல் பிரிவு, சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு, நிலப் போக்குவரத்து ஆணையம், கவ்டெக் எனப்படும் அரசாங்க தொழில்நுட்ப நிறுவனம், பொதுப் பயனீட்டுக் கழகம் உட்பட 26 அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் சைடெக்ஸ் (Cidex) எனப்படும் முக்கியமான உள்கட்டமைப்புத் தற்காப்புப் பயிற்சியில் பங்கேற்றனர்.
சைடெக்ஸ் பயிற்சியின்போது, உண்மையான இணையத் தாக்குதல்காரர்களால் பின்பற்றப்பட்ட உத்திகளைப் பிரதிபலிக்கும் பல்வேறு சவால்கள் அணிகளுக்கு வழங்கப்பட்டன.
5ஜி கைப்பேசிக் கட்டமைப்பில் ஊடுருவுதல், மின்சாரம் மற்றும் ரயில் செயல்பாடுகளில் குறுக்கிடுதல் போன்ற செயல்பாடுகள், குடிமக்களின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் நோக்கத்தில் தாக்குதல்கள் போன்றவை பயிற்சியில் அடங்கும்.
சைடெக்ஸ் பயிற்சிக்குத் தயாராவதற்கு, பங்கேற்பாளர்கள் ஆறு நாள் ஆயத்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இது சைடெக்சின் மூன்றாவது பதிப்பு. மேலும் முதல் முறையாக உருவகப்படுத்தப்பட்ட மேகக் கணிமை, செயற்கை நுண்ணறிவு, ரயில் அமைப்புகள் ஆகியவை பயிற்சியில் சேர்க்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அதிகரித்து வரும் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டிற்கு மத்தியில் இணைய வெளியில் உருவாகி வரும் அச்சுறுத்தல்களுக்கு இது ஒரு பதில் நடவடிக்கை என்று இணையப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் எட்வர்ட் சென் கூறினார்.
தொழில்நுட்ப மாற்றத்தின் வேகம், இணையப் பாதுகாப்பில் தனியார் துறையுடன் தொடர்ந்து பங்காளியாக இருப்பது சிங்கப்பூர் ஆயுதப் படைக்கு முக்கியமானது என்று பிரிகேடியர் ஜெனரல் சென் மேலும் கூறினார்.