சிங்கப்பூரின் நாணய மதிப்பை வலுவடையச் செய்யும் நோக்கில் சிங்கப்பூர் நாணய ஆணையம் தனது நாணயக் கொள்கை நிலைப்பாட்டை இறுக்கமாக்கி உள்ளது.
2022ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாகத் தற்போது ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஈரான் போர் காரணமாக எண்ணெய், எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், அதனைச் சமாளிக்க சிங்கப்பூரின் நாணயத்தை வலுவாக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது.
எனவே நாணயக் கொள்கை நிலைப்பாட்டை இறுக்கிப்பிடிப்பது அவசியம் என ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) தெரிவித்தது.
இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பால் ஏற்படும் தாக்கத்தைச் சமாளிக்க சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு கூறிய ஆணையம், இவ்வாண்டுக்கான பணவீக்க முன்னுரைப்பை அரை விழுக்காடு அதிகரித்து, 1.5 விழுக்காடு முதல் 2.5 விழுக்காடு வரை இருக்கும் என்றது.
இதற்கு முன்னர், அந்த விகிதம் 1 விழுக்காடு முதல் 2 விழுக்காடு வரை இருக்கும் என்று அது கணித்திருந்தது.
அடிப்படைப் பணவீக்கம், எல்லாப் பொருள்களுக்குமான பணவீக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒட்டுமொத்தப் பணவீக்கத்திற்கான முன்னுரைப்பு இது.
தொடர்புடைய செய்திகள்
எரிசக்தியை இறக்குமதி செய்வதற்கு சிங்கப்பூரில் ஆகும் செலவுகள் ஏற்கெனவே அதிகரித்துவிட்டன. இனி வரும் காலாண்டுகளில் இறக்குமதிப் பொருள்களின் விலையிலும் சேவைகளின் கட்டணத்திலும் மாற்றம் இருக்கும் என எதிர்பாரக்கப்படுகிறது. அதன் விளைவாக அடிப்படைப் பணவீக்கம் அதிகரித்து அடுத்த சில காலாண்டுகளுக்கு அந்த நிலையிலேயே நீடிக்கும் என்றது ஆணையம்.
ஆணையம் வெளியிட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் நிபுணர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
எச்எஸ்பிசி சிங்கப்பூரின் மூத்த ஆசியான் பொருளியல் நிபுணர் திருவாட்டி யூன் லியு கூறுகையில், வளர்ச்சியிலும் பணவீக்கத்திலும் அபாயங்களை சிங்கப்பூர் எதிர்கொள்வதால் ஆணையம் தனது இறுக்கமான கொள்கையை அளவோடு கையாண்டதாகத் தெரிவித்தார்.
மிதமிஞ்சிய சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு சிங்கப்பூரின் ஏற்றுமதிகளைப் போட்டித்தன்மை குறைந்ததாக மாற்றக்கூடும் என்றார் அவர்.
“இப்போதைய நிலையில் ஆணையம் மிகவும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. வளர்ச்சி குறித்த அதன் மதிப்பீடும் மிகவும் எதிர்மறையாக இருப்பதே அதற்கு முக்கியக் காரணம் என்றம் திருவாட்டி யூன் கூறினார்.
“ஆணையம் இன்னும் கடினமாக தனது நாணயக் கொள்கையை இறுக்கிப் பிடிக்கும் என்று நாங்கள் கருதவில்லை,” என்றார் அவர்.
இந்நிலையில், மேபேங்க் பொருளியல் ஆய்வுப் பிரிவின் இணைத் தலைவர் சுவா ஹக் பின், ஜூலை மாதம் ஆணையம் மீண்டும் ஓர் இறுக்கமான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கருதுகிறார்.

