சிங்கப்பூருக்கும் தென் அமெரிக்க வர்த்தக அமைப்பான மெர்கோசூருக்கும் (MERCOSUR) இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பிரேசிலிலும் சிங்கப்பூரிலும் நடப்புக்கு வந்துள்ளதாக வர்த்தக, தொழில் அமைச்சு சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் நாட்டின் பொருளியலை மேலும் வெளிப்படையாகவும் உலகளாவிய வாய்ப்புகளுடன் இணைக்கவும் உதவும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது என்று துணைப் பிரதமரும் வர்த்தக தொழில்துறை (வர்த்தகம்) அமைச்சருமான கான் கிம் யோங் தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க வட்டாரத்தில் சிங்கப்பூரின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாகவும் ‘மெர்கோசூர்’ கூட்டமைப்பின் மிகப்பெரிய பொருளியலாகவும் பிரேஸில் விளங்குகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட 96 விழுக்காட்டுப் பொருள்களுக்கான சுங்கவரி படிப்படியாக நீக்கப்படும் என்றார் அவர்.
இவ்வாறு செய்வது சிங்கப்பூர் நிறுவனங்கள் குறைந்த செலவில் லத்தீன் அமெரிக்கச் சந்தைகளில் காலூன்றித் தொழிலை விரிவுபடுத்த பெரிதும் வழிவகுக்கும்.
உள்ளூர் நிறுவனங்கள் அனைத்துலகச் சந்தைகளில் வளர்ச்சி காண்பதன் மூலம், சிங்கப்பூரர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் பொருளியல் நன்மைகளும் உருவாக்கப்படும் என்று துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
மெர்கோசூர் - சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சிங்கப்பூரின் 29வது ஒப்பந்தமாகும். மேலும், அந்த அமைப்பைத் தோற்றுவித்த அர்ஜென்டினா, பிரேசில், பராகுவே, உருகுவே ஆகிய உறுப்பு நாடுகளுடன் சிங்கப்பூர் மேற்கொள்ளும் முதல் வர்த்தக உடன்படிக்கையுமாகும்.
2025ஆம் ஆண்டு நிலவரப்படி, 295 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட மெர்கோசூர் அமைப்பு கூட்டாகக் கிட்டத்தட்ட மூன்று டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுள்ளது.
அந்த ஒப்பந்தம் முன்னதாக சிங்கப்பூர், பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளுக்கிடையே அமல்படுத்தப்பட்டது. தற்போது, அர்ஜென்டினாவுடனான ஒப்புதல் செயல்முறைகள் நடைபெற்று வருகின்றன.
லத்தீன் அமெரிக்காவுடனான சிங்கப்பூரின் பொருளியல் உறவில் அந்த வளர்ச்சி ஒரு முக்கிய மைல்கல் என்று வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்தது.
2027ஆம் ஆண்டில் சிங்கப்பூரும் பிரேசிலும் தங்களுக்கு இடையிலான அரசதந்திர உறவின் 60ஆம் ஆண்டைக் குறிக்க ஆயத்தமாகிவரும் வேளையில், அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
பிரேசில், மெர்கோசூர் அமைப்பில் ஆகப்பெரிய பொருளியலைக் கொண்ட நாடாகவும் அவ்வட்டாரத்தில் சிங்கப்பூரின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாகவும் திகழ்வதாக அமைச்சு குறிப்பிட்டது.
தென்கிழக்காசியாவில் பிரேசிலின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் சிங்கப்பூர் விளங்குகிறது.
வர்த்தகத் தடைகளைக் குறைத்தல், முதலீட்டுக்கான சூழலை வலுப்படுத்துதல், மின்னிலக்கமயமாதல், அரசாங்கக் கொள்முதல், நிலையான வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், சிங்கப்பூருக்கும் அந்த நான்கு தென் அமெரிக்க நாடுகளுக்கும் இடையிலான பொருளியல் ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவதே அந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

