தாய்லாந்து மன்னரின் மூத்த மகள் இளவரசி பஜ்ரகிட்டியாபா மறைவால் சிங்கப்பூர் ஆழ்ந்த வருத்தமடைந்துள்ளது.
சிங்கப்பூரின் அதிபர், பிரதமர், வெளியுறவு அமைச்சர் ஆகியோர் தாய்லாந்தின் தங்களுடைய சகாக்களுக்கு எழுதிய கடிதத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
இளவரசி பஜ்ரகிட்டியாபா தமது 47 வயதில் ஜூன் 11ஆம் தேதி காலமானார்.
கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து சுயநினைவின்றி கோமாவிலிருந்த அவர் கடைசி வரை அதிலிருந்து மீண்டு வரவில்லை.
பேங்காக்கில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் அவரது மறைவால் சிங்கப்பூர் அரசாங்கம் வருத்தமடைந்ததாகக் கூறியது.
அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வோங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்ட இரங்கல் கடிதங்களையும் அது பகிர்ந்துகொண்டது.
“அரச மாண்புமிகு இளவரசி சேவையும் நோக்கமும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்,” என்று தாய்லாந்து மன்னர் மகா வஜ்ஜிராலோங்கோர்னுக்கு எழுதிய கடிதத்தில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு தூதராக, ஒரு வழக்கறிஞராக நீதித்துறையின்மீது கொண்ட வலுவான உணர்வால் அவர் புகழடைந்தார்,”.
தொடர்புடைய செய்திகள்
தாய்லாந்து செஞ்சிலுவைச் சங்கம், பராமோங்குட்க்லாவ் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான அறக்கட்டளை போன்ற மனிதாபிமான முயற்சிகளுக்கு அவர் அளித்த உறுதியான ஆதரவையும் அதிபர் தர்மன் சுட்டிக்காட்டினார். 1999, 2014ல் சிங்கப்பூருக்கு இளவரசி மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்த அவர், இளவரசியுடன் உரையாடும் வாய்ப்புப் பெற்ற சிங்கப்பூரர்கள் அவரது நிதானத்தாலும் அறிவாற்றலாலும் ஈர்க்கப்பட்டனர் என்றார்.
“இளவரசி பெருமைக்குரிய அம்சங்களை விட்டுச் சென்றுள்ளார். அவர் பெரிதும் நினைவுகூரப்படுவார்,” என்று அதிபர் தர்மன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வோங், தாய்லாந்து பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குல்லுக்கு எழுதிய கடிதத்தில் தாய்லாந்து சமூக மேம்பாட்டுக்காக இளவரசி அளித்த பங்களிப்புகளால் என்றும் நினைவில் இருப்பார் என்று கூறியுள்ளார்.
“எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் வசதியற்ற மக்களுக்கும் அவர் உறுதியான ஆதரவாளராக இருந்தார்,” என்றும் பிரதமர் வோங் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

