மறதிநோயால் பாதிக்கப்பட்ட தந்தை ராஜன், அதனால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தமது பெண் குழந்தை, அதனால் மனமுடைந்து வாடும் மனைவி எனச் சிக்கலான சூழலைக் கையாளும் மகன் அரவிந்த்.
இப்படி ஒரு நோயாளி, அவரைப் பராமரிக்கும் குடும்பம் ஆகியவற்றின் சிக்கலான கட்டமைப்பையும் அதில் உள்ள சிரமங்களையும் உணர்வுபூர்வமாகப் பேசுகிறது ‘தி லாஸ்ட் திரெட்’ குறும்படம்.
மொத்தம் 25 நிமிடங்கள் ஓடும் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் விக்னேஸ்வரன் செல்வா.
சிங்கப்பூர் மறதிநோய்க்கான அமைப்பும் லியன் அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்த ‘சிங்கப்பூர் மறதிநோய்க் கதைகள்’ எனும் நிகழ்ச்சியில் ஐந்து குறும்படங்கள் இடம்பெற்றன.
அவற்றில் ஒன்றான இப்படம், பார்வையாளர்கள் பலரிடமும் கண்ணீரை வரவழைத்தது.
ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராஜன் மறதிநோயுடன் நடத்தும் போராட்டம், குடும்பக் கட்டமைப்பு, குற்ற உணர்ச்சி, சோகம் என விறுவிறுப்பும் உணர்ச்சிததும்பும் வகையிலும் இப்படத்தை அமைத்திருந்தார் செல்வா.
“காணொளித் தொகுப்பாளராகத் தொடங்கி, கடந்த 14 ஆண்டுகளாக இத்துறையில் பயணம் செய்து, பல்வேறு விதமான படங்களில் பணியாற்றியுள்ளேன். ஆயினும், இது முற்றிலும் மாறுபட்ட அனுபவம்,” என்றார் செல்வா.
மறதிநோய் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் அதுகுறித்த புரிதல் தம்மிடம் குறைவாகவே இருந்ததாகவே அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இப்படத்திற்காக பல்வேறு நோயாளிகளின் பராமரிப்பாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களது வாழ்க்கை, சிரமங்கள், மனநிலை, உணர்ச்சிகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டதாக அவர் சொன்னார்.
‘லிங்க்ட் இன்’ சமூக ஊடகத்தின்வழி தற்செயலாகக் கிடைத்த வாய்ப்பு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது என்றார் அவர்.
இப்படத்தை இயக்கும்போது பலரும் தங்களின் குடும்பம், நண்பர்கள் எனச் சுற்றத்தில் இவ்வகைச் சிக்கலை எதிகொண்ட கதைகளைப் பகிரத் தொடங்கினர். அதனையடுத்து, இது பலரும் எதிர்நோக்கும் சிக்கல் என்பதையும், அதனைச் சமூகம் அறிந்துகொள்வது முக்கியம் என்பதையும் உணர்ந்ததாக அவர் சொன்னார். அதில் பங்காற்ற வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சியென்றும் அவர் கூறினார்.
ராஜனாக நடித்த விருது பெற்ற மூத்த நடிகர் ஏ.பன்னீர்செல்வம், “இது ஒரு விழிப்புணர்வு திரைப்படம். நான் கேள்விப்பட்ட, பார்த்த கதாபாத்திரங்களை மனத்திற்கொண்டு நடித்தேன்,” என்று கூறினார்.
“பராமரிப்பாளர்களின் பணி எளிதன்று. அவர்களின் பொறுமையும் பெருந்தன்மையும் அளப்பரியவை. அதுகுறித்த விழிப்புணர்வு எற்படுத்தும் படத்தில் நடித்துள்ளது மகிழ்ச்சி,” என்றார் திரு பன்னீர்செல்வம்.
ஒவ்வொருவரையும் வெவ்வேறு விதமாக பாதிக்கும் மறதிநோய், பராமரிப்பாளர்கள், குடும்பத்தினர், ஒட்டுமொத்த சமூகம் மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதால், அதுகுறித்த புரிதலை ஏற்படுத்தும் வண்ணம் ஐந்து குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் இப்படத்தைப் பார்க்க ஏதுவாக ஜனவரி 31ஆம் தேதி இலவசமாக இரு திரையிடல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

