தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி

3 mins read
f703b844-1ea2-4b07-bf7c-246e607b29d7
செய்தியாளர்களுடன் பேசிய டாக்டர் பால் தம்பையா. - படம்: சாவ் பாவ்

தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வை அகற்றுவது, கட்டுப்படியாகக்கூடிய விலையில் மகப்பேற்றுப் பராமரிப்பும் குழந்தைப் பராமரிப்பும், பொருள், சேவை வரியை ஏழு விழுக்காடாகக் குறைப்பது போன்ற அம்சங்களில் கவனம் செலுத்த போவதாகச் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி அதன் தேர்தல் அறிக்கை வெளியீட்டில் தெரிவித்தது.

அக்கட்சி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) அதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

40க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் கொண்ட அந்த அறிக்கை, ஆறு முக்கிய கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வரிவிதிப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடியேற்றம், வீடுகளுக்கான விருப்புரிமை அடிப்படையில் மறுமேம்பாட்டுத் திட்டம், கல்வி ஆகியவை அவற்றில் அடங்கும்.

‘வாழ்வது மட்டுமல்ல, செழிக்கவும்’ எனும் தனது தேர்தல் முழக்கவரியை ஏப்ரல் 19ஆம் தேதி அறிவித்ததையடுத்து கட்சியின் தலைவர் பால் தம்பையா தேர்தல் அறிக்கையை இயூ டீ ஸ்குவேர் மையத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

கட்சியின் துணைத் தலைவர் பிரையன் லிம், ஏற்பாட்டுச் செயலாளர் ஜுஃப்ரி சலிம், டாக்டர் ஜிஜின் வோங் போன்றோரும் அவருடன் இருந்தனர்.

கட்டுப்படியாகும் வகையில் வீடுகள் வாங்குவதைக் குறித்துப் பேசிய டாக்டர் பால் தம்பையா, வீடுகளுக்கான பொதுச்சந்தை அல்லாத திட்ட முறையைப் பரிந்துரைத்தார்.

இந்த முறையின்கீழ் பொது வீடுகளின் விலை குறைவாக இருக்கும். வீவக வீடுகளின் விலையில் கட்டுமானம், நிர்வாகச் செலவு மட்டுமே அடங்கும். நிலத்தின் விலை உள்ளடக்கப்படாது. இது தற்போதைய வீவக வீட்டுக் கட்டுமான நடைமுறையிலிருந்து வேறுபட்டது.

தற்போதைய பொதுச்சந்தை வீட்டு உரிமையாளர்கள் அவர்களின் வீடுகளைப் புதிய முறைக்கு மாற்றியமைக்கும் தெரிவும் இருக்கும். இத்திட்டம் ஈரறை வீடுகளைக் கிட்டத்தட்ட $90,000க்கும், மூவறை வீடுகளைக் கிட்டத்தட்ட $120,000க்கும், நான்கறை வீடுகளை $200,000க்கும், ஐந்தறை வீடுகளை $270,000க்கும் வழங்கக்கூடும் என்று கட்சி நம்புகிறது.

தற்போதைய கல்வி முறை பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் அதிக அழுத்தத்தை அளிப்பதாகச் சொன்ன டாக்டர் தம்பையா, தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு அகற்றப்பட வேண்டும் என்றார்.

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்குதல், பள்ளி, வகுப்புத் தரவரிசையை நீக்குதல், பாலர் பள்ளிகளை தேசியமயமாக்குதல் போன்றவையும் அவற்றில் அடங்கும்.

மகப்பேற்று, குழந்தைப் பராமரிப்புச் சேவைகளைப் பெரும்பாலும் இலவசம் ஆக்குவதன் மூலம் கருத்தரிப்பு விகிதத்தை அதிகரிக்க முடியும் என்று கூறிய டாக்டர் தம்பையா, மருத்துவமனைகளின் இயக்கச் செலவுகள் வரிகளிலிருந்து செலுத்தப்பட வேண்டுமென்ற பரிந்துரையை முன்வைத்தார்.

பருவநிலை மாற்றத்தைக் குறித்து விளக்கிய அவர், சிங்கப்பூர்க் காடுகளை அழிப்பது தடை செய்யப்பட வேண்டுமென்றார்.

“காடுகளும், வனப்பகுதிகளும் சிங்கப்பூரின் நுரையீரல்கள். இந்தப் பகுதிகளின் தொடர்ச்சியான அழிவு நமக்குத் தீங்கு விளைவிக்கும்,” என்றார் டாக்டர் பால்.

கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் காணப்பட்டார்.

இயூ டீ ஸ்குவேர் மையத்தில் மக்களுடன் சிரித்துப் பேசிய திரு சீ சூன் ஜுவான்.
இயூ டீ ஸ்குவேர் மையத்தில் மக்களுடன் சிரித்துப் பேசிய திரு சீ சூன் ஜுவான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“எங்களால் முடிந்தவரை அனைத்தையும் செய்து வருகிறோம். இதற்காக அல்லும் பகலும் உழைக்கிறோம். பிரதமர் லாரன்ஸ் வோங் மக்களிடம் அவரது திட்டங்களை அறிவிக்க வேண்டும். வேட்புமனுத் தாக்கல் நாள் வரை எங்களுக்கு இன்னும் பல வேலைகள் உள்ளன,” என்று சீ சூன் ஜுவான் செய்தியாளர்களிடம் கூறினார்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் மார்சிலிங்- இயூ டீ குழுத்தொகுதியில் களமிறங்கவுள்ளது. இளம் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள அரிஃபின் ‌‌‌ஷா, 27, தமிழ்முரசிடம் பேசினார்.

“பிரதமர் வோங்குடன் போட்டியிடுவது சவாலாகத்தான் இருக்கும். ஓர் இளம் வேட்பாளராக இளம் பெற்றோர், பிள்ளைப் பராமரிப்பு ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தி உதவ விரும்புகிறேன். அரசியலை ஒரு தளமாகப் பயன்படுத்தி இளம் வாக்காளர்களுடனான எனது பிணைப்பை வலுப்படுத்த விரும்புகிறேன்,” என்றார் அரிஃபின் ‌‌‌ஷா.

குறிப்புச் சொற்கள்