வாக்களிப்பு நாளுக்கு முன்பு பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூருக்கு ஆக ஏற்புடைய மக்கள்தொகை என்ன என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சிஜக) தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான் சவால் விடுத்துள்ளார்.
பீக்கன் தொடக்கப்பள்ளியில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) இரவு நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “இதற்கு முந்தைய பிரதமர்கள், சிங்கப்பூருக்கு ஏற்ற மக்கள்தொகை பற்றிக் கூறியிருந்தனர். ஏன் பிரதமர் வோங் மட்டும் அமைதியாக இருக்கிறார்?” என வினவினார்.
பிரசாரத்தில் பேசிய மற்றொருவரான சிஜக தலைவர் டாக்டர் பால் தம்பையா, சுகாதாரக் காப்புறுதிக் கொள்கைகள் சார்ந்த விவாதத்துக்கும் மக்கள் செயல் கட்சியை அழைத்துள்ளார்.
“பேராசிரியர் டாமி கோவை நான் அவ்வளவு மதிப்பதற்கு ஒரு காரணம், அவர் மசெகவுக்கும் எனக்கும் இடையே சுகாதார நிதியியல் தொடர்பான விவாதத்துக்கு 11 ஆண்டுகளுக்குமுன் ஏற்பாடு செய்ததே. நான் மீண்டும் அதற்காகக் கேட்டிருக்கிறேன். இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை,” என்றார் டாக்டர் தம்பையா.
விறுவிறுப்பான மேடைப் பேச்சுகளில் சுகாதாரம், காப்புறுதி, மனநலம், குடிநுழைவு தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி கட்சியின் இரு தலைவர்களும் பேசினர்.
“ஏதேனும் சில துறைகளில் நமக்கு உதவி செய்வதற்காக வெளிநாட்டவர் வந்தால் சரி. சிஜக, வெளிநாட்டவருக்கு எதிரான கட்சியன்று. அவர்களை நாங்கள் மரியாதையுடன் நடத்துவோம். மசெகவின் பொறுப்பற்ற குடிநுழைவுக் கொள்கைகளைக் குறைகூறுகிறோம்,” என்றார் டாக்டர் சீ.
சிங்கப்பூரர்களில் 49 விழுக்காட்டினர் மனச்சோர்வு அடைந்துள்ளதாகவும் 25 விழுக்காட்டினர் மனவுளைச்சலுக்கு உள்ளானதாகவும் டாக்டர் சீ ஆய்வுகளைச் சுட்டினார்.
சிங்கப்பூரில் மனநலமே ஆகப்பெரிய சுகாதாரப் பிரச்சினை என 2023 உலக மனநல அறிக்கை கூறியதாகவும் இதனால் சிங்கப்பூர் ஆண்டுக்கு கிட்டத்தட்ட $60 பில்லியனை இழக்கிறது என புதிய என்யுஎஸ்-மனநலக் கழக ஆய்வு கூறியதையும் அவர் சுட்டினார். இதற்குக் காரணம், விலைவாசி உயர்வு, மக்கள்தொகை அதிகரிப்பு என்றார் டாக்டர் சீ.
தொடர்புடைய செய்திகள்
“திருவாட்டி ஹோ சிங், நல்ல நகரத் திட்டம் இருந்தால் சிங்கப்பூரில் எட்டு முதல் 10 மில்லியன் பேர் வரைகூட வசிக்கலாம் என தம் ஃபேஸ்புக் பதிவில் கூறியிருந்தார். தொலைக்காட்சியில் என்னைச் சாடிய டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இப்போது அமைதியாக இருக்கிறார்,” என்றார் டாக்டர் சீ.
அமைச்சர் ஓங்கிற்கு பதிலடி
“ஏப்ரல் 24ஆம் தேதி தன் பிரசாரத்தில் அமைச்சர் ஓங் யி காங் கூறியதை என்னால் நம்பமுடியவில்லை. ஒரு வேட்பாளார் தம் அரசியல் திட்டத்துக்காக தம் குடியிருப்பாளர்களைக் கைவிட்டு மற்றொரு தொகுதிக்குச் சென்றதாகக் கூறினார். அவர் யாரைச் சொன்னார் எனத் தெரியவில்லை - துணைப் பிரதமர் கான் கிம் யோங்கையா மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கையா?” என டாக்டர் தம்பையா வினவினார்.
அமைச்சர் ஓங் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் 2011ல் தோற்றதையடுத்து செம்பவாங் குழுத்தொகுதிக்கு வந்ததையும் மற்ற சிஜக வேட்பாளார்கள் நினைவூட்டினர். புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி காணாமல் போனது குறித்து அவர்கள் கேள்விகள் எழுப்பினர்.
செம்பவாங் வெஸ்ட் குடியிருப்பாளர்களுக்குக் கூடுதலான பசுமை வளங்கள் தேவை என டாக்டர் சீ கூறியதற்கு அட்மிரல்டி பூங்கா, புக்கிட் கேன்பராவை அமைச்சர் ஓங் தம் பிரசாரத்தில் சுட்டியிருந்தார்.
அதுகுறித்து கருத்துரைத்த டாக்டர் தம்பையா, “குடியிருப்பாளர்கள், தாமே தங்களுக்குக் கூடுதல் பசுமை வளங்கள் தேவை என எங்களிடம் கூறினர்,” என்றார்.