பொதுமக்கள் பாதுகாப்புக்காகத் தீவு முழுவதும் பயன்படுத்தக்கூடிய ஆளில்லா வானூர்திகளை உருவாக்கும் சிங்கப்பூர்

பொதுமக்கள் பாதுகாப்புக்காகத் தீவு முழுவதும் பயன்படுத்தக்கூடிய ஆளில்லா வானூர்திகளை உருவாக்கும் சிங்கப்பூர்

2 mins read
c24e8950-5ed5-4015-9bf2-0d9ea6676742
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) முதல் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) வரை சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடைபெறும் மிலிபோல் டெக்எக்ஸ் உச்சநிலை மாநாட்டில் 2026ல் இந்த ஆளில்லா வானூர்திப் பெட்டி அமைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வருங்காலத்தில் குற்றவாளிகளைத் துரத்தவும் தீ விபத்துகளைப் பதிவு செய்யவும் வழக்கமான சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்ளவும் சிங்கப்பூர் முழுவதும் ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூரத்திலிருந்து கட்டுப்படுத்தப்படும் இந்த ஆளில்லா வானூர்திகள், தீவு முழுவதும் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளிலிருந்து பறந்து சென்று, சம்பவங்கள் தொடர்பாக அதிகாரிகள் விரைவாகப் பதிலளிக்கவும் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பே கூடுதல் தகவல்களைப் பெறவும் உதவும்.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) முதல் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) வரை சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடைபெறும் மிலிபோல் டெக்எக்ஸ் உச்சநிலை மாநாட்டில் 2026ல் இந்த ஆளில்லா வானூர்திப் பெட்டி அமைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வுக்கு ஹோம் டீம் அறிவியல். தொழில்நுட்பப் பிரிவு , சிவிபோல், டெக்எக்ஸ் வென்ச்சர்ஸ், கோமெக்ஸ்போசியம் ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன. இதற்குச் சிங்கப்பூரின் உள்துறை அமைச்சு, பிரான்சின் உள்துறை அமைச்சு ஆகியவை ஆதரவளிக்கின்றன.

தற்போது, காவல்துறை ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்த ஏறத்தாழ ஒரு மணிநேரம் ஆகிறது. அதிகாரிகள் ஆளில்லா வானூர்தியைச் சம்பவ இடத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும். இது போக்குவரத்து நெரிசலைப் பொறுத்து மாறுபடும்.

புதிய ஆளில்லா வானூர்திப் பெட்டி அமைப்பின் மூலம், அதிகாரிகள் அல்லது தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கொண்டிருக்கும்போதே, 40 கிலோ எடையுள்ள ஆளில்லா வானூர்தி உடனடியாக அங்கே அனுப்பப்படும்.

இந்த ஆளில்லா வானூர்தியில் மூன்று வெவ்வேறு வகையான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அவை ஒரு ஸ்பீக்கர் மற்றும் ஸ்பாட்லைட்டையும் சுமந்து செல்லக்கூடியவை.

ஒவ்வொரு ஆளில்லா வானூர்தியும் கிட்டத்தட்ட 4,000 கிலோ எடையுள்ள ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் மின்கலன்கள், தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளக்கூடிய கேமராக்கள் ஆகியவை இருக்கும். இந்த அமைப்பு ஆளில்லா வானூர்திகள் நீண்ட காலத்துக்குச் செயல்பாடுகளைத் தொடர அனுமதிக்கிறது.

குறிப்புச் சொற்கள்