பணமோசடிக் குற்றவாளியான ஸாங் ருயிஜின்னை கடந்த ஜூன் மாதம் கம்போடியாவுக்கு நாடு கடத்தும்போது சிங்கப்பூர், கம்போடிய அமைப்புகளிடம் அது குறித்து பேசவில்லை என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் ஆகஸ்ட் 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஒரு பயணி அங்கு செல்ல அனுமதிக்கப்படுகிறாரா என்பது குறித்து, ஒரு பொது விதியாக, நாங்கள் வெளிநாடுகளை முன்கூட்டியே கலந்தாலோசிப்பதில்லை, ” என்று திரு சண்முகம், பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வியா லிம் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போது விளக்கினார்.
“இறையாண்மை கொண்ட நாடு என்ற முறையில் ஒரு வெளிநாடு தனது மண்ணில் யாரை அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது. அப்படி ஒருவர் தனது நாட்டுக்கு வந்து சேரும்போது அவரை தனது நாட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் அதிகாரமும் அதற்கு உண்டு,” என்றும் அமைச்சர் விவரித்தார்.
ஸாங் கம்போடியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர், ஜூலை மாதம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஒரு துணைக் கேள்வியில், வெளிநாட்டுக் குற்றவாளிகள் மற்ற குற்றங்களுக்கு வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக ‘மிகவும் சாதகமான’ அதிகார வரம்பிற்குட்பட்ட நாட்டுக்கு நாடு கடத்தப்படுவதைத் தேர்ந்தெடுப்பார்களா என்பது குறித்து அரசாங்கத்திற்கு அக்கறை உள்ளதா என்று திருவாட்டி லிம் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த திரு சண்முகம், சிங்கப்பூர் சட்டத்தின் கீழ், வெளிநாட்டினராக இருக்கும் குற்றவாளிகள் தங்கள் கடப்பிதழ் அனுமதிக்கும் எந்த இடத்திற்கும் நாடு கடத்தப்படுவதைத் தேர்வு செய்யலாம் என்றார்.