தோக்கியோவில் ஆண் வாடிக்கையாளர்களைப் படமெடுத்ததற்காக வெளியுறவு அமைச்சின் அதிகாரிக்கு அபராதம்

2 mins read
e92104d0-a73f-4dbf-aa1a-c76491598a5c
குற்றம் புரிந்த நேரத்தில், சிம் சியோங் சாய், ஜப்பானில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் ஆலோசகராக இருந்தார். - படங்கள்: இன்ஸ்டகிராம், SINGAPORE EMBASSY TOKYO /ஃபேஸ்புக்

தோக்கியோவில் உள்ள பொதுக் குளியல் பகுதியில் பதின்மவயது சிறுவனை ரகசியமாகப் படமெடுத்த முன்னாள் அரசதந்திரி ஒருவருக்கு 300,000 யென் (S$2,575) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகம் தெரிவித்துள்ளது.

சிம் சியோங் சாய், 55, குற்றங்களைப் புரிந்தபோது ஜப்பானில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் ஆலோசகராக இருந்தார்.

அது, அனுபவம் வாய்ந்த வெளியுறவுச் சேவை அதிகாரிகளுக்கான அரசதந்திரப் பதவியாகும்.

ஜப்பானிய அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதற்காக, அவர் ஜூன் 9ஆம் தேதி ஜப்பான் திரும்பியதாக ‘அசாஹி ஷிம்புன்’ நாளேடு கூறியது.

சிம், ஜப்பான் திரும்பவேண்டும் என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சு மூலம் தோக்கியோ காவல்துறை கடந்த மே மாதம் சிங்கப்பூர் தூதரகத்திற்குக் கோரிக்கையை முன்வைத்திருந்தது.

அவர் பிப்ரவரி 27ஆம் தேதி பிடிபட்டபோது, ஜப்பானியக் காவல்துறையினரால் அவரைத் தடுத்துவைக்க முடியவில்லை. அவர் அரசதந்திரியாக இருந்ததே அதற்குக் காரணம்.

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி, அந்த அரசதந்திரி அவரது திறன்பேசியைப் பயன்படுத்தி, பொதுக் குளியல் பகுதியின் ஆண்கள் உடைமாற்றும் அறையில் ஆடையின்றி இருந்த 13 வயது சிறுவனை ரகசியமாகப் படமெடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் இருந்த ஊழியர்கள் காவல்துறையினரை அழைத்ததாகக் கூறப்படுகிறது.

அங்குச் சென்றடைந்த காவல்துறையினர் அரசதந்திரியின் கைப்பேசியைச் சோதனை செய்தபோது, அதில் அந்தச் சிறுவனின் நிர்வாணப் படமும், பல ஆண் வாடிக்கையாளர்களின் படங்களும் இருந்ததைக் கண்டனர்.

விசாரணையில் உதவ, அந்த ஆடவர் தமது பணிகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்