அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் விசாரணை முடிவுகளுடன் சிங்கப்பூர் உடன்படவில்லை என்று எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருக்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ள வரி விதிப்பு நடவடிக்கைகளால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் வியாழக்கிழமை (நவம்பர் 26) அமைச்சு கூறியது.
சிங்கப்பூர்மீது முன்மொழியப்பட்ட வரி விதிப்பு நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவது, வரிகளைக் குறைப்பதற்கான வழிகளை ஆராய்வது குறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அமைச்சு குறிப்பிட்டது.
சிங்கப்பூர் உள்ளிட்ட 14 முக்கிய வர்த்தகப் பங்காளிகள்மீது கூடுதல் வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்ததைத் தொடர்ந்து இவ்வறிக்கை வெளியாகியுள்ளது.
அமெரிக்க உற்பத்தியைப் பாதிக்கும் வகையில் இந்நாடுகள் ஊக்குவிப்பதாகக் கூறப்படும் அதிகப்படியான தொழில்துறைத் திறனை எதிர்கொள்ள, 20 முதல் 40 விழுக்காடு வரை புதிய அதிகபட்ச வரிகள் முன்மொழியப்பட்டுள்ளன.
சிங்கப்பூர்ப் பொருள்களுக்கு, தற்போதுள்ள பிரிவு 301 வரிகளைக் கருத்தில்கொண்டு, 20 விழுக்காடு வரை வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது. சில பொருள்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நடந்துகொண்டிருக்கும் அல்லது நிறைவடைந்த வர்த்தக உடன்பாடுகள் மூலம் தீர்மானிக்கப்படும் குறைந்த அளவுகளில் புதிய வரிகளைக் கட்டுப்படுத்த உத்தேசித்துள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் கூறியது.
அமெரிக்காவின் ஆய்வு முடிவுகள் சிங்கப்பூரின் பொருளியல் கட்டமைப்பைக் கருத்தில்கொள்ளவில்லை என அமைச்சு தெரிவித்தது. சிங்கப்பூரின் உலகளாவிய வர்த்தக உபரி அதன் வெளிநோக்கு, சந்தை சார்ந்த பொருளியலையும் நம்பகமான வணிக, வர்த்தக மையம் என்ற தகுதியையும் வெளிப்படுத்துவதாக அது விளக்கியது.
குறைந்த வளங்களைக் கொண்ட சிறிய நாடாக, போட்டித்தன்மையுடன் இருப்பதும் சந்தைகள் திறம்படச் செயல்படுவதை உறுதிசெய்வதுமே சிங்கப்பூரின் முன்னுரிமை என்று அமைச்சு கூறியது.
