நம்பகத்தன்மை, பாதுகாப்பு அம்சங்களை ஆராய குழு அமைத்துள்ள எஸ்எம்ஆர்டி

நம்பகத்தன்மை, பாதுகாப்பு அம்சங்களை ஆராய குழு அமைத்துள்ள எஸ்எம்ஆர்டி

2 mins read
a53c7644-7ae7-4ddd-a012-7e437b7fd64b
அண்மைக் காலத்தில் பலமுறை ரயில் சேவைத் தடை ஏற்பட்டதையடுத்து, எஸ்எம்ஆர்டி நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுப் போக்குவரத்து நம்பகத்தன்மை, பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை ஆராய ரயில் போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டி குழு ஒன்றை அமைத்துள்ளது.

எஸ்எம்ஆர்டி நிறுவனம், நிலப் போக்குவரத்து ஆணையம், தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் அக்குழு உறுப்பினர்களாக இடம்பெறுவர்.

சிங்கப்பூரில் அண்மைக்காலத்தில் ரயில் சேவையில் பல முறை தடை ஏற்பட்டது. அதில் எம்ஆர்டி ரயில் போக்குவரத்து 37 ஆண்டுகளாகக் காணாத சேவைத் தடையை கிழக்கு-மேற்குத் தடத்தில் கண்டது. அதனால், செப்டம்பர் 25ஆம் தொடங்கி 30ஆம் தேதிவரை தொடர்ச்சியாக கிழக்கு-மேற்கு ரயில் தடத்தில் சேவை முடங்கியது.

இந்நிலையில், எஸ்எம்ஆர்டி நிறுவனம், ரயில் சேவையின் நம்பகத்தன்மை, பாதுகாப்பு குறித்து ஆராய குழு அமைத்திருப்பது கவனிக்கத்தக்கது.

இது குறித்து வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், அக்குழுவில் நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த வல்லுநர்கள் இடம்பெறுவர் என்று கூறியது. மேலும், எஸ்எம்ஆர்டி நிறுவன ரயில்கள் பிரிவுத் தலைவர் லாம் ஷியவ் காயும் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் கட்டமைப்பு, வளர்ச்சிப் பிரிவின் துணைத் தலைமை நிர்வாகியான யீ பூன் சியாவும் குழுவின் இணைத் தலைவர்களாகச் செயல்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை நிர்வாகம், வளங்களைப் புதுப்பிப்பது, பராமரிப்புச் செயல்முறைகள் ஆகியவை தொடர்பில் தற்போதிருக்கும் நடைமுறை குறித்து ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஓர் அங்கமாக, அந்தக் குழுவினால் மற்ற நகரங்களில் செயல்படும் ரயில் சேவையுடன் சிங்கப்பூர் ரயில் சேவையை ஒப்பிடும். குறிப்பாக, குவாங்ஸோ மெட்ரோ, தைப்பே மெட்ரோ சேவை ஆகியவற்றுடன் சிங்கப்பூர் ரயில் சேவையின் தரநிலையைக் குழு ஒப்பிட்டுப் பார்க்கும்.

“இது கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளவும் உலகின் இரு முன்னணி மெட்ரோ ரயில் சேவையின் நம்பகத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றுடன் எஸ்எம்ஆர்டி சேவையை ஒப்பிட்டுப் பார்க்கவும் உதவும்,” என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் கூறியது.

குறிப்புச் சொற்கள்