தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாடாளுமன்றத்துக்கு வலுவான எதிர்க்கட்சி தேவையில்லை என்பது பழைய பஞ்சாங்கம்: சிமுக

2 mins read
cb62cd4c-7c34-44b3-a5b6-66d2249e1530
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி வேட்பாளர்கள் (முன்வரிசை, இடமிருந்து) லியோங் மன் வாய், டாக்டர் டான் செங் போக், ஹேசல் புவா, (பின்வரிசை, இடமிருந்து) சானி இஸ்மாயில், சுமார்லெகி அம்ஜா. - படம்: செய்யது இப்ராகிம்

நாடாளுமன்றத்திற்கு வலுவான எதிர்க்கட்சி தேர்வுசெய்யப்பட்டால் சிங்கப்பூர் தடம்புரண்டுவிடும் எனச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியதற்கு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (சிமுக) பதிலளித்துள்ளது.

பூன் லே பிளேஸ் சந்தையில் வியாழக்கிழமை (மே 1) சிமுகவின் தொகுதி உலாவுக்கு முன்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சித் தலைவர்கள் இதனைக் கூறினர்.

சிமுகவின் தொகுதி உலாவில் அக்கட்சி வேட்பாளர்களும் தலைவர்களும் மக்களைச் சந்தித்தனர்.
சிமுகவின் தொகுதி உலாவில் அக்கட்சி வேட்பாளர்களும் தலைவர்களும் மக்களைச் சந்தித்தனர். - படம்: செய்யது இப்ராகிம்

“மசெகவுக்கு மட்டும்தான் அனைத்து சக்தியும் இருக்க வேண்டும் எனச் சிங்கப்பூரர்களை பயமுறுத்தாதீர்கள். கூடுதல் எதிர்க்கட்சியினர் இருந்தால் இன்னும் பலதரப்பட்ட யோசனைகள், கண்ணோட்டங்கள் இருக்கும் என நான் உறுதியளிக்கிறேன். விவாதிக்க அஞ்சக்கூடாது. நம் சிறு கட்சியில்கூட பல விவாதங்கள் உள்ளன,” என்றார் சிமுக தலைவர் டான் செங் போக்.

எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு மசெக பதிலளிக்க வேண்டும் என்று சொன்ன டாக்டர் டான், “ஏனெனில் நாங்கள் பிரதிநிதிப்பது எங்களுக்கு வாக்களித்த சிங்கப்பூரர்களையே,” என்றார்.

கட்சியின் தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய் இக்கருத்தை ஆமோதித்தார்.

“கடந்த தேர்தல்களில் அமைச்சர்களையும் குழுத்தொகுதிகளையும் இழந்தபோது மசெக பலவீனம் அடைந்ததா? பலவீனமான அரசாங்கத்தால் பொருள், சேவை வரி ஏற்றத்துக்கான மசோதாவை 2022ல் நிறைவேற்றியிருக்க முடியுமா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

கட்சியின் துணைத் தலைவர் ஹேசல் புவா, “வலுவான எதிர்க்கட்சி மசெகவுக்கும் நாட்டுக்கும் நல்லது,” என 2011ல் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியிருந்ததை நினைவுபடுத்தினார்.

எதிர்க்கட்சி வென்றால் நல்ல தலைவர்களை இழக்க நேரிடும் என மசெக கூறுவது குறித்து கருத்துரைத்த அவர், “அமைச்சர் ஓங் 2011 தேர்தலில் தோற்றபின் அடுத்த தேர்தலில் மற்றொரு குழுத்தொகுதியில் நின்றார்,” எனக் கூறினார்.

இத்தேர்தலில் கூறப்படும் சில கருத்துகள், கொள்கைகளைக் குறிவைக்கின்றனவே தவிர, குறிப்பிட்ட வேட்பாளரை அல்ல என்றார் திரு லியோங்.

“உதாரணத்துக்கு, அமைச்சர் டெஸ்மண்ட் லீ வீடமைப்பு தொடர்பான விவாதத்துக்கு இன்னும் உறுதியான பதிலளிக்கவில்லை என்று கூறினோமே தவிர அவரைத் தாக்கவில்லை,” என்றார் அவர்.

“அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கம் சிங்கப்பூருக்காக என்ன செய்யவுள்ளது என அது தெளிவாகக் கூற வேண்டும். ஏற்கெனவே அது கூறியுள்ளதையே இப்போதும் கூறிவருகிறது. வீட்டு விலை உயர்வு, பிடிஓ வீடுகளுக்கான நீண்டகால காத்திருப்பு நேரம், முடிவடையும் குத்தகை போன்ற பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வளிப்பதில் உறுதிகாட்ட வேண்டும்,” என்றார் திரு லியோங்.

இந்நிலையில், மசெகவுக்கும் சிமுகவுக்கும் இடையே ஜனவரியில் மூண்ட சச்சரவு குறித்து காவல்துறையின் விசாரணை முடிவு, வாக்களிப்பு நாளுக்கு முன்பே மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என சிமுக வலியுறுத்தியது.

“இத்தனை நாள்களுக்குப் பின்பும் ஏன் தீர்ப்பு வெளிவரவில்லை?” என டாக்டர் டான் வினவினார். வாக்காளர்கள் முடிவெடுப்பதற்கு தீர்ப்பு கைகொடுக்கும் என்றார் திரு லியோங்.

சிமுகவின் தொகுதி உலாவில் அக்கட்சி வேட்பாளர்களும் தலைவர்களும் மக்களைச் சந்தித்தனர்.
சிமுகவின் தொகுதி உலாவில் அக்கட்சி வேட்பாளர்களும் தலைவர்களும் மக்களைச் சந்தித்தனர். - படம்: செய்யது இப்ராகிம்
குறிப்புச் சொற்கள்