ஓசிபிசி வங்கித் தலைமைப் பொருளியல் வல்லுநர் கணிப்பு

வட்டார நாணயங்களுக்கு நிகராக சிங்கப்பூர் வெள்ளி தொடர்ந்து வலுவடையக்கூடும்

2 mins read
885d9805-0061-4fe8-b0e9-d7d938c43dc9
ஓசிபிசி வங்கியின் தனியார் வாடிக்கையாளர்களுக்கான முதலீட்டுக் கருத்தரங்கில் வங்கியின் தலைமைப் பொருளியல் வல்லுநர் செலீனா லிங் உரையாற்றினார். - படம்: ஓசிபிசி

2026ல் இந்த வட்டார நாடுகளின் நாணயங்களுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு தொடர்ந்து மிதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் சிங்கப்பூர்வாசிகளுக்கு இது நற்செய்தியாகும்.

ஓசிபிசி வங்கியின் தனியார் வாடிக்கையாளர்களுக்கான முதலீட்டுக் கருத்தரங்கில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) பேசிய வங்கியின் தலைமைப் பொருளியல் வல்லுநர் செலீனா லிங், 2025ல் குறைவாக இருந்த பணவீக்கம் 2026ல் சற்று அதிகரிக்கக்கூடும் என்றார். எனினும், சிங்கப்பூர் நாணய மதிப்பை மெதுவாக வலுவடையச் செய்வதற்கான கொள்கையில் தனது நிலைப்பாட்டை மாற்றச் சிங்கப்பூர் நாணய ஆணையத்துக்கு அவசரமில்லை என்று அவர் கூறினார்.

“ஜப்பானிய நாணயம் உள்ளிட்ட வட்டார நாணயங்களுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு மிதமாக உயரும். இது நம் அனைவருக்கும் நற்செய்தி,” என்றார் அவர்.

ராஃபிள்ஸ் பிளேசில் ஆர்கெட் நாணய மாற்று வணிகத்தில் உள்ள திரை, நாணய மாற்று விகிதத்தைக் காட்டுகிறது.
ராஃபிள்ஸ் பிளேசில் ஆர்கெட் நாணய மாற்று வணிகத்தில் உள்ள திரை, நாணய மாற்று விகிதத்தைக் காட்டுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வலுவான பொருளியல் வளர்ச்சி, உள்நாட்டில் வலுவான தேவை, நிலையான நாணய நிலவரம் போன்ற காரணங்களால் 2026ல் சிங்கப்பூருக்குச் சாதகமான நிலை இருப்பதைத் திருவாட்டி லிங் சுட்டினார்.

அரசாங்கத்தின் 4 விழுக்காட்டு முன்னுரைப்பை விஞ்சி, 2025ல் சிங்கப்பூர்ப் பொருளியல் 4.8 விழுக்காடு வளர்ச்சி கண்டது. 2021க்குப் பிறகு இது பொருளியலின் ஆகச் சிறந்த வளர்ச்சியாகும்.

2025ஐ ‘அசுர வளர்ச்சி ஆண்டு’ என வர்ணித்த திருவாட்டி லிங், 2026ல் சிங்கப்பூர்ப் பொருளியல் வளர்ச்சி 3 விழுக்காட்டைத் தாண்டுவதற்கான சாத்தியம் உள்ளதாகக் கூறினார்.

“செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி தொடர்ந்தால், நிதி மற்றும் காப்புறுதித் துறைகள் தொடர்ந்து சிறப்பாகச் செய்தால், பயணிகளின் வருகை தொடர்ந்தால், 1 விழுக்காட்டுக்கும் 3 விழுக்காட்டுக்கும் இடைப்பட்ட வளர்ச்சி முன்னுரைப்பையும் விஞ்சுவதற்கான சாத்தியம் உள்ளது,” என்றார் அவர்.

2025ல் அமெரிக்காவின் வரிவிதிப்புச் சூழலுக்கு மத்தியில் ஆசியான் சிறந்து விளங்கியதையும் அவர் சுட்டினார்.

“செயற்கை நுண்ணறிவு தொடர்பான வளர்ச்சி, தரவு நிலைய வளர்ச்சி இரண்டாலும் ஏராளமான நாடுகள் பயனடைந்துள்ளன. அதேவேளையில், வட்டி விகிதமும் குறைந்துள்ளது. உள்நாட்டுத் தேவை வலுவாக இருந்து வந்துள்ளது,” என்று அவர் விவரித்தார்.

2025ல் பொருளியல் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகரித்த நிலையில், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசியான் நாடுகளின் பொருளியல் 2026ல் மெதுவடையக்கூடும் எனவும் திருவாட்டி லிங் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்