சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குள் வாகனங்கள் நுழைவதற்கான ‘விஇபி’ எனப்படும் வாகன நுழைவு அனுமதி அட்டையை செப்டம்பர் 18 முதல் சிங்கப்பூர் ஓட்டுநர்கள் உட்லண்ட்சிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
இது அந்த ஓட்டுநர்களுக்கான மூன்றாவது தெரிவு.
முதல் தெரிவு, விஇபியை ஜோகூரில் நேரடியாகச் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும். அடுத்ததாக, அதனை அஞ்சல் வழியாக ஓட்டுநரின் சிங்கப்பூர் முகவரியில் பெறும் வசதியும் உள்ளது.
வரும் அக்டோபர் மாதம் முதல் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்குள் நுழையும் எல்லா வாகனங்களும் வாகன நுழைவு அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.
அந்த அனுமதியின்றி மலேசியாவுக்குள் நுழையும் வாகன ஓட்டுநர்கள் 2,000 ரிங்கிட் அபராதத்தையும் ஆறு மாதம் வரையிலான சிறைத் தண்டனையையும் எதிர்நோக்குவர்.
விஇபி அட்டையைப் பெற்றுக்கொள்ள உட்லண்ட்சில் தகவல் மையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. செப்டம்பர் 18 முதல் சிங்கப்பூர் ஓட்டுநர்கள் அதனை அங்கு பெற்றுக்கொள்ளலாம் என்று சிஎன்ஏ செய்தித்தளம் கூறியது.
விஇபி அட்டையைப் பெற முன்பதிவு செய்ததை உறுதிப்படுத்தும் ‘டிசிசென்ஸ்’ நிறுவனத்தின் செப்டம்பர் 3ஆம் தேதியிடப்பட்ட மின்னஞ்சல் ஒன்றை சிஎன்ஏ கண்டது.
உட்லண்ட்சில் உள்ள விஇபி தகவல் மையத்தில் செப்டம்பர் 18ஆம் தேதி முன்பதிவுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் அந்த மின்னஞ்சலில் இடம்பெற்று இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
‘டிசிசென்ஸ்’ என்பது சிங்கப்பூர் ஓட்டுநர்களின் சந்தேகங்களைத் தீர்த்து உதவ மலேசியாவின் சாலைப் போக்குவரத்துத் துறையில் பணிக்கு அமர்த்தப்பட்ட நிறுவனம்.
இன்று (செப்டம்பர் 3) முதல் அந்த முன்பதிவைச் செய்துகொள்ளலாம் என்றும் உட்லண்ட்சில் விஇபி வழங்குவது செப்டம்பர் 18 முதல் தொடங்கும் என்றும் சிஎன்ஏ கருதுகிறது.
உட்லண்ட்சில் விஇபி பெறும்போது, சில வரையறைக்குப் பொருந்தக்கூடிய வாகனங்களின் முன்பக்கக் கண்ணாடியில் ‘ஆர்எஃப்ஐடி’ குறியீடு பொருத்தப்படும். அவ்வாறு இல்லாத வாகனங்களின் முன்பக்க விளக்கின் மீது ஒட்டப்படும் என்பதையும் சிஎன்ஏ அறிகிறது.
அந்த அட்டையைப் பெற சிங்கப்பூர் ஓட்டுநர்கள் $39 கட்டணம் செலுத்த வேண்டும். அந்த அட்டைக்கான செயலாக்கக் கட்டணம் 10 ரிங்கிட் (S$3) செலுத்தப்படுவதற்கு மேல் இந்தக் கட்டணத்தை அவர்கள் உட்லண்ட்ஸ் தகவல் மையத்தில் செலுத்த வேண்டும்.
விஇபி தகவல் மையம் 186 உட்லண்ட்ஸ் தொழியல் பூங்கா E5ன் மூன்றாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
வார நாள்களில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்த மையம் திறந்திருக்கும்.
தொடக்கமாக, நாள் ஒன்றுக்கு 50 வாகனங்களுக்கு விஇபி அட்டையைப் பொருத்துவதே இலக்கு என்று அந்த மையத்தை நிர்வகிக்கும் MY VEP என்னும் சிங்கப்பூர் நிறுவனம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறியது.

