ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளின் கட்டணத்தை மூன்று சிங்கப்பூர் ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் உயர்த்தியுள்ளன.
கட்டண உயர்வு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வந்துள்ளது.
உட்லண்ட்சில் அமைந்துள்ள சிங்கப்பூர் சேஃப்டி ஓட்டுநர் நிலையம் (SSDC) தனது கட்டாய ஓட்டுநர் பயிற்சிக் கட்டணத்தை 25.2 விழுக்காடு உயர்த்தியுள்ளது.
ஒரு பயிற்சி அமர்வுக்கு 30.52 வெள்ளி கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் அது 24.38 வெள்ளியாக இருந்தது.
அதேபோல் பாட அமர்வுக்கான கட்டணமும் 23.1 விழுக்காடு உயர்ந்துள்ளது.
ஒரு பாட அமர்வுக்கு 21.80 வெள்ளி கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் அது 17.71 வெள்ளியாக இருந்தது. ஒரு பாட அமர்வு 100 நிமிடங்கள் நடத்தப்படும்.
புக்கிட் பாத்தோக் ஓட்டுநர் நிலையத்தில், உச்ச நேரங்களில் 100 நிமிட ஓட்டுநர் பயிற்சிக்கான கட்டணம் 6.8 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 80.66 வெள்ளியாக அது இருந்தது. தற்போது அது 86.11 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வார நாள்களில் இரவு 7.20 மணி முதல் 9 மணிவரை நடக்கும் பயிற்சி வகுப்புகள் உச்ச நேரப் பயிற்சி வகுப்புகள் ஆகும்.
உபியில் உள்ள கம்ஃபர்ட்டெல்குரோ ஓட்டுநர் நிலையத்திலும் உச்ச நேரத்தில் 100 நிமிட ஓட்டுநர் பயிற்சிக்கான கட்டணம் 9.3 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 81.75 வெள்ளியாக அது இருந்தது. தற்போது அது 89.38 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அங்கு வார நாள்களில் காலை 10.20 மணி முதல் பிற்பகல் வரை நடக்கும் பயிற்சி வகுப்புகளும் மாலை 4.25 மணி முதல் இரவு 10.20 மணி வரையிலான வகுப்புகளும் உச்ச நேரப் பயிற்சி வகுப்புகள் ஆகும்.
இந்த மூன்று ஓட்டுநர் நிலையங்களில் வழங்கப்படும் மற்ற பிரிவு வகுப்புகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அவ்விவரங்களை அவற்றின் இணையத்தளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

