மத்திய கிழக்குப் போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு இயக்கவிருந்த மேலும் பல விமானங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனங்கள் ரத்துசெய்துள்ளது.
சிங்கப்பூர்-துபாய் இடையே இயக்கப்படும் எஸ்கியூ494, எஸ்கியூ495 விமானங்கள் மே 31ஆம் தேதிவரை ரத்து செய்யப்படுவதாக செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) ஃபேஸ்புக் வழியாக எஸ்ஐஏ தெரிவித்தது.
“போர் நீடித்தால் மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு இயக்கப்படும் மற்ற எஸ்ஐஏ விமானச் சேவைகளும் பாதிக்கப்படும்,” என்றும் அது கூறியிருக்கிறது.
விமானச் சேவைகள் ரத்தால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு மாற்று விமானங்களில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் அல்லது அவர்கள் பயன்படுத்தாத நுழைவுச்சீட்டுகளுக்கான பணம் முழுவதுமாகத் திருப்பித் தரப்படும் என்று எஸ்ஐஏ தெரிவித்துள்ளது.
பயண முகவர்கள் அல்லது பங்காளி விமான நிறுவனங்கள் வழியாகப் பயணச்சீட்டு வாங்கியோர் அவர்களை நேரடியாக நாடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் மேலும் பல ரத்துசெய்யப்படுவதாக எஸ்ஐஏவின் மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனமான ஸ்கூட் மார்ச் 26ஆம் தேதி தெரிவித்திருந்தது.
அதன்படி, சிங்கப்பூருக்கும் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கும் இடையே இயக்கப்படும் டிஆர்796, டிஆர்797 விமானங்கள் ஏப்ரல் 16 வரை ரத்துசெய்யப்பட்டுள்ளன.

