ரத்த நன்கொடை நிபந்தனை தளர்வு

2 mins read
8640be4e-b772-44f3-9d18-83812e779cf3
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் பல ஆண்டு காலமாக ரத்த நன்கொடை வழங்க இயலாமல் இருந்து வந்த மக்கள் விரைவில் ரத்தத்தை நன்கொடையாக வழங்க முடியும்.

மூளையையும் தண்டுவடத்தையும் பாதிக்கக்கூடிய 'விசிஜேடி' என்ற நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தில் நீண்டகாலமாக நடப்பில் இருந்து வந்த கட்டுப்பாட்டை சிங்கப்பூர் அகற்றவிருக்கிறது.

இவ்வேளையில், ரத்த நன்கொடை செய்து தேசிய ரத்த இருப்பை அதிகரிக்கும்படி 'ஓ பிளஸ்', 'ஓ மைனஸ்' வகை ரத்தத்தைக் கொண்டிருப்போரை சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கேட்டுக்கொண்டார்.

இளையர்களில் மேலும் பலர் வழக்கமாக ரத்தம் வழங்க ஊக்குவிக்கும் நோக்கத்தில் புதிய விருது ஒன்று தொடங்கப்பட்டது.

விசிஜேடி மனிதர்களின் உடலில் பல ஆண்டுகளாக இனப்பெருக்கம் செய்யக்கூடிய ஒரு வகைக் கிருமியாகும். அதற்கு நம்பத்தகுந்த ரத்த சோதனை எதுவுமில்லை.

பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்திருக்கும் மக்கள் ரத்த நன்கொடை செய்வதைப் பல நாடுகள் அனுமதிப்பதில்லை.

ஆனாலும் ரத்தம் ஏற்றுவதன் மூலம் விசிஜேடி கிருமி பரவும் ஆபத்து குறைவு என்பது அண்மைய அறிவியல் ஆய்வுகள் மூலம் தெரியவந்து இருக்கிறது.

இதையடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தாங்கள் விதித்திருந்த தடையை நீக்கிவிட்டன.

உலக ரத்த நன்கொடையாளர் தினத்தைக் குறிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், அந்த நோயைப் பரப்பக்கூடிய வெள்ளை அணுக்களை, நன்கொடை ரத்தத்தில் இருந்து பிரித்து எடுத்துவிடலாம் என்று தெரிவித்தார்.

ஆகப் புதிய நிலவரங்களையும் அனைத்துலக ஆதாரங் களையும் கருத்தில்கொண்டு நிபந்தனைகளை இந்த ஆண்டு பிற்பகுதியில் சிங்கப்பூர் தளர்த்தும் என்றார் அமைச்சர். இதன் விளைவாக ரத்த நன்கொடை சீராகக் கிடைக்க வழிபிறக்கும்.

அத்தகைய மக்கள் இப்போது ரத்த நன்கொடை செய்ய இந்த வெள்ளை அணு பிரித்தெடுப்பு முறையைப் பின்பற்றலாம்.

ஆர்வம் உள்ளவர்கள் கட்டுப்பாடுகள் அகன்றதும் சுகாதார அறிவியல் ஆணையத்தின் ஊட்ரம் ரோடு ரத்த வங்கியில் நன்கொடை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்