சிங்கப்பூர்ப் பொருளியல் மூன்றாம் காலாண்டில் 5.4% வளர்ச்சி

சிங்கப்பூர்ப் பொருளியல் மூன்றாம் காலாண்டில் 5.4% வளர்ச்சி

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Oct 2026 - 9:24 am

2 mins read

சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் 5.4 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.

முந்தைய காலாண்டில் வளர்ச்சி விகிதம் ஆண்டு அடிப்படையில் 6.2 விழுக்காடாகப் பதிவாகியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் விகிதம் குறைந்துள்ளது.

காலாண்டு அடிப்படையில் பொருளியல் 1.1 விழுக்காடு வளர்ச்சிகண்டது. இது, இரண்டாம் காலாண்டில் பதிவான 1.5 விழுக்காட்டு வளர்ச்சியைவிடக் குறைவாகும்.

எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சு புதன்கிழமை (அக்டோபர் 14) இத்தகவல்களை வெளியிட்டது.

உற்பத்தித் துறை

மூன்றாம் காலாண்டில் உற்பத்தித் துறை ஆண்டு அடிப்படையில் 7.5 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. முந்தைய காலாண்டில் பதிவான 12.9 விழுக்காட்டைக் காட்டிலும் வளர்ச்சி விகிதம் குறைவாகப் பதிவானது.

கட்டுமானத் துறை

ஆண்டு அடிப்படையில் கட்டுமானத் துறை மூன்றாம் காலாண்டில் 8.8 விழுக்காடு வளர்ச்சிகண்டது. இரண்டாம் காலாண்டில் பதிவான 6.1 விழுக்காட்டைவிட மூன்றாம் காலாண்டில் வளர்ச்சி விகிதம் கூடியது.

சேவைத் துறைகள்

சேவைத் துறைகளில் ஒட்டுமொத்த வர்த்தகம், சில்லறை வர்த்தகம், போக்குவரத்து மற்றும் சேமிப்பகம் ஆகியவை மூன்றாம் காலாண்டில் ஆண்டு அடிப்படையில் ஒட்டுமொத்தமாக எட்டு விழுக்காடு வளர்ச்சியடைந்தன. முந்தைய காலாண்டில் பதிவான 6.9 விழுக்காட்டைக் காட்டிலும் அது அதிகமாகும்.

சேவைத் துறைகளில் எல்லாப் பிரிவுகளும் வளர்ச்சிகண்டன.

இயந்திரங்கள், பொருள்கள், விநியோகப் பொருள்கள் ஆகிய பிரிவுகளில் காணப்பட்ட உயர்வு, ஒட்டுமொத்த வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக விளங்கியது. அதேபோல் போக்குவரத்து மற்றும் சேமிப்பகத் துறையில் காணப்பட்ட வளர்ச்சிக்கு கடல், ஆகாயப் போக்குவரத்துப் பிரிவுகள் உறுதுணையாக இருந்தன.

அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்ற அம்சங்கள் கருத்தில்கொள்ளப்பட்ட பிறகு ஒட்டுமொத்த வர்த்தகம், போக்குவரத்து மற்றும் சேமிப்பகத் துறைகள் காலாண்டு அடிப்படையில் 2.2 விழுக்காடு வளர்ச்சியடைந்தன. இரண்டாம் காலாண்டில் இத்துறைகளில் வளர்ச்சி பூஜ்யமாக இருந்தது.

தகவல் தொடர்புகள், நிதி, காப்புறுதி, நிபுணத்துவச் சேவைத் துறைகள் மூன்றாம் காலாண்டில் ஆண்டு அடிப்படையில் 4.3 விழுக்காடு வளர்ச்சியடைந்தன. முந்தைய காலாண்டில் பதிவான 5.1 விழுக்காட்டு வளர்ச்சியைக் காட்டிலும் வளர்ச்சி விகிதம் குறைவாகப் பதிவானது.

மூன்றாம் காலாண்டில் தங்குமிட மற்றும் உணவுச் சேவைகள், சொத்து, நிர்வாக மற்றும் ஆதரவுச் சேவைகள் உள்ளிட்டவற்றைக் கொண்ட மற்றச் சேவைத் துறைகளில் ஆண்டு அடிப்படையில் வளர்ச்சி 2.1 விழுக்காடாகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வர்த்தகம்வளர்ச்சிஉற்பத்திகட்டுமானத் துறை