தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசியர் சரும முதிர்ச்சி தொடர்பில் $14 மில்லியன் ஆய்வை மேற்கொள்ளும் சிங்கப்பூர்

2 mins read
dafda73c-9f27-416f-a41d-1404e5b1469d
முதுமை அடையும்போது தோல் மெலிவடைகிறது. - படம்: பிக்சாபே

சருமம் தொடர்பான பெரும்பாலான ஆய்வுகள், ஐரோப்பியர்களை மையமாகக் கொண்டுள்ளதால் ஆசியர்களின் தோல் முதிர்ச்சியடைவது குறித்து அதிகம் அறியப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலை மாறவிருக்கிறது. $14 மில்லியனுக்கு நான்காண்டு கால ஆய்வு ஒன்றை சிங்கப்பூர் மேற்கொள்ள உள்ளது. பல்துறை ஆய்வுத் திட்டமான இது, ஆசியர்களிடையே தோல் முதிர்ச்சியடைவதற்கான காரணங்களைக் கண்டறியும்.

இதனால், தோல் மெலிவடைதல், தொடர்ந்து அரிப்பு ஏற்படுதல் போன்ற வயது தொடர்பான சரும சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடலின் ஆகப் பெரிய உறுப்பாகக் கருதப்படும் நமது தோல், காயங்களிலிருந்தும் நுண்ணுயிர் தாக்குவதிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது.

நமக்கு வயதாக ஆக, தோல் மெலிதாகும்; அதன் மீள்தன்மை குறையும்; பலவீனமடையும். தன் செயல்பாட்டுத் திறனை இழக்கும்போது ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் ஆற்றலை, ஒருவரது சருமம் மெல்ல இழக்கும். தட்பவெப்ப நிலையைக் கட்டுப்படுத்தும் தன்மையும் குறையும். அத்துடன் தொற்றுக் கிருமிகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும் ஆற்றலும் குன்றும்.

இதற்கிடையே, இப்புதிய ஆய்வுத் திட்டம் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்க உள்ளதாக ஆய்வின் முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் ரேச்சல் வாட்சன் கூறினார்.

ஆசிய சருமத்துக்கே உரிய புத்தாக்க, தடுப்பு நடவடிக்கைகளையும் சிகிச்சை முறைகளையும் கண்டறிவதை இந்த ஆய்வு நோக்கமாகக் கொண்டிருக்கும் என்றார் அவர்.

‘ஏஸ்டார்’ (A*Star) எனப்படும் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பின் சரும ஆய்வுக்கூடங்கள், சிங்கப்பூர் சரும ஆய்வுக் கழகத்தின் நிர்வாக இயக்குநரான பேராசிரியர் வாட்சன், சரும முதிர்ச்சி குறித்து ஆராயும் வல்லுநராவார்.

மருத்துவர்கள், உயிரியல் வல்லுநர்கள், பொறியாளர்கள், தரவு அறிவியலாளர்கள் போன்றோரை ஒன்றிணைக்கும் ஆய்வுத் திட்டமாக இது கருதப்படுகிறது.

“அழகு, ஒப்பனை ஆகியவை குறித்த சிந்தனையிலிருந்து விலகி நமது தோலைப் பராமரிக்கும் தகவல்களை அறிவது பற்றியது. நமது சருமத்தின் செயல்பாட்டைப் பற்றியது,” என்று பேராசிரியர் வாட்சன் ஆய்வு குறித்து விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்