சிங்கப்பூர், எத்தியோப்பியத் தலைநகரான அடிஸ் அபாபாவில் தூதரகம் ஒன்றை நிறுவவிருப்பதாகப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் திங்கட்கிழமை (நவம்பர் 24) அறிவித்துள்ளார்.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள எத்தியோப்பியாவுக்குத் திரு வோங் பிரதமராக முதல்முறை அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார்.
“தென்கிழக்காசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகத்தையும் முதலீட்டையும் பெருக்க சிங்கப்பூரும் எத்தியோப்பியாவும் உதவ முடியும்,” என்று எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமது அலியுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் வோங் கூறினார்.
எத்தியோப்பியாவில் நிறுவப்படும் தூதரகம், கிழக்கு ஆப்பிரிக்காவில் சிங்கப்பூர் நிறுவும் முதல் தூதரகம். அது, 2027ஆம் ஆண்டுக்குள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தியோப்பியாவுடன் உள்ள பங்காளித்துவத்தில் சிங்கப்பூர் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறது என்பதை நிரூபிக்கும் அம்சமாகத் தூதரகம் அமையும் என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமையகம் அடிஸ் அபாபாவில் இருப்பதால் சிங்கப்பூரின் தூதரகம் அங்கு அமைக்கப்படுவது ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவுடனான சிங்கப்பூரின் உறவை மேலும் வலுப்படுத்தும் என்றார் பிரதமர் வோங்.
அந்த ஆப்பிரிக்க ஒன்றியத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பிரதிநிதிக்கும் 55 உறுப்பினர்கள் உள்ளனர்.
திறன் மேம்பாட்டிலும் கரிம ஊக்கப் புள்ளிகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுவாக்கும் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதைப் பிரதமர் வோங்கும் டாக்டர் அபியும் பார்வையிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
முதல் ஒப்பந்தத்தின்கீழ் சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகங்களில் உள்ள மூத்த ஆப்பிரிக்க அதிகாரிகளுக்கான முதுகலை உபகாரச் சம்பளங்களையும் நிர்வாகக் கல்வித் திட்டங்களையும் வழங்கும் புதிய தொழில்நுட்ப உதவித் தொகுப்புத் திட்டத்தை சிங்கப்பூர் அறிமுகம் செய்யும்.
சிங்கப்பூர்க் கூட்டுறவுத் திட்டம், சிங்கப்பூர்- ஆப்பிரிக்க பங்காளித்துவ தொகுப்புத் திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ் இதுவரை 13,000க்கும் அதிகமான ஆப்பிரிக்க அதிகாரிகள் சிங்கப்பூரில் பயின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 300 பேர் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள்.
“இந்தச் சிறு திட்டத்தின்மூலம் சிங்கப்பூர் ஆப்பிரிக்காவின் நீடித்த வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிக்க விரும்புகிறது,” என்றார் பிரதமர் வோங்.
இரண்டாம் ஒப்பந்தத்தின்கீழ் சிங்கப்பூரும் எத்தியோப்பியாவும் கரிமச் சந்தையின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராயும்.
எத்தியோப்பியா காப்32 கூட்டத்தை 2027ஆம் ஆண்டு நடத்தவிருக்கிறது.
இத்தகைய நேரத்தில் எத்தியோப்பியாவுடன் சிங்கப்பூர் இரண்டு ஒப்பந்தங்களைச் செய்துகொள்வது மிகப் பொருத்தமானது என்றார் பிரதமர் வோங்.
2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூருக்கு டாக்டர் அபி மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணம் சிங்கப்பூர்- எத்தியோப்பிய உறவை வலுப்படுத்தியிருப்பதையும் திரு வோங் சுட்டினார்.
சிங்கப்பூரும் எத்தியோப்பியாவும் 2024ஆம் ஆண்டு, 55 ஆண்டு நிறைவை அனுசரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

