முன்னணிச் செயற்கை நுண்ணறிவு நாடாக உருவெடுக்கும் சிங்கப்பூர்

முன்னணிச் செயற்கை நுண்ணறிவு நாடாக உருவெடுக்கும் சிங்கப்பூர்

3 mins read
2f55787a-f2da-49f8-b655-18858ac1cb63
செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி நாடாகச் சிங்கப்பூரை உறுதியாக நிலைநிறுத்தும் நோக்கில், புதிய ‘செயற்கை நுண்ணறிவு வீரர்கள்’ திட்டம் தொடங்கப்படவுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பட்ட பொருளியலைக் கொண்ட, அத்துறையில் முன்னணி நாடாகச் சிங்கப்பூரை உறுதியாக நிலைநிறுத்தும் நோக்கில், புதிய ‘செயற்கை நுண்ணறிவு வீரர்கள்’ (Champions of AI) திட்டம் தொடங்கப்படவுள்ளதாகத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் அறிவித்துள்ளார்.

இவ்வாண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படவுள்ள இத்திட்டம், உற்பத்தித்திறன், புத்தாக்கம், வருவாய் வளர்ச்சிக்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த முனைப்பு கொண்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கப்பூர் நிறுவனங்களை ஈடுபடுத்தும்.

“முக்கியச் செயல்பாடுகள், நிறுவன நடைமுறைகள், ஊழியரணி நடைமுறைகள் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன்மூலம், அந்நிறுவனங்கள் தங்கள் தொழிலை உருமாற்றம் செய்ய அவற்றுடன் இணைந்து பணியாற்றுவோம்,” என்று திங்கட்கிழமை (மார்ச் 2) நடைபெற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றியபோது வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் கூறினார்.

இந்த ஆதரவில் விரிவான தலைமைத்துவப் பயிற்சி, தெளிவான, அளவிடக்கூடிய வர்த்தகத் தாக்கத்தை ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவு உருமாற்றத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான வளங்களும் அடங்கும். மிக முக்கியமாக, இந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளிப்பதிலும் முதலீடு செய்யும்; இதன்மூலம் அதிக மதிப்புடைய, செயற்கை நுண்ணறிவு சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஊழியரணிக்கு ஆற்றலளிக்கப்படும்.

முன்னோடிகளாகச் செயல்படுவதன் மூலம், அந்த ‘வீரர்கள்’ மற்ற நிறுவனங்களுக்கு நம்பிக்கையூட்டும் வழிகாட்டிகளாக அமைவர்.

நவீன உற்பத்தியில் செயற்கை நுண்ணறிவுத் திட்டப்பணிகள்

தனிப்பட்ட நிறுவனங்களைத் தாண்டி, நவீன உற்பத்தி, தொடர்புத்திறன், நிதி, சுகாதாரப் பராமரிப்பு போன்ற முக்கிய அடித்தளத் துறைகளில் தொடங்கி, குறிப்பிட்ட செயற்கை நுண்ணறிவுத் திட்டப்பணிகள் மூலம் துறை தழுவிய உருமாற்றத்தை முன்னெடுக்க இந்த உத்தி விரிவடைகிறது என்று துணைப் பிரதமர் கான் தெரிவித்தார்.

நவீன உற்பத்தித் துறைக்கான செயற்கை நுண்ணறிவுத் திட்டப்பணி குறித்து, எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான டாக்டர் டான் சீ லெங் விரிவாகப் பேசினார்.

வேகமான, திறமையான கட்டமைப்புகளுக்குச் செயற்கை நுண்ணறிவையும் இயந்திரவியலையும் பயன்படுத்துதல், முன்னோடித் தீர்வுகளை உருவாக்குதல், பரந்த அளவிலான துறைசார் மாற்றங்களை முன்னெடுத்தல் ஆகிய மூன்று முக்கியக் கூறுகளை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் முக்கிய அங்கமாக, ஏ-ஸ்டார் (A*STAR) எனப்படும் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பின் உற்பத்தித்துறைச் செயற்கை நுண்ணறிவுச் சிறப்பு நிலையம் (AIMfg) விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் வர்த்தகத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பொதுவான செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் தொகுப்பு மேலும் விரிவடையும்.

மேலும், ‘உருவகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு’ (Embodied AI) துறையில் வலுவான திறன்களை உருவாக்கும் திட்டங்களையும் டாக்டர் டான் சுட்டிக்காட்டினார். தங்களைச் சுற்றியுள்ள சூழலை உணர்ந்து, தன்னிச்சையாக முடிவெடுத்து, அறிமுகமில்லாத சூழல்களிலும் நோக்கமுடன் செயல்படக்கூடிய இயந்திரங்களை உருவாக்குவதன்மூலம், செயற்கை நுண்ணறிவை நேரடியாக நடைமுறை உலகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதே இதன் குறிக்கோளாகும்.

ஒன்-நார்த்தில் புதிய செயற்கை நுண்ணறிவுப் பூங்கா

அத்துடன், ஒன்-நார்த் பகுதியில் ‘கம்போங் ஏஐ’ என்ற பெயரில் புதிய செயற்கை நுண்ணறிவுப் பூங்காவை அரசாங்கம் அமைக்கிறது.

திறனாளர்கள், ஆய்வாளர்கள், விரிவான வளங்கள் ஒன்றிணைந்து கூட்டுத்திறனை உருவாக்குவதற்கான மையப் புள்ளியாக அந்தப் பூங்கா திகழும் என்று குறிப்பிட்ட துணைப் பிரதமர் கான், இது ஒத்துழைப்பை விரைவுபடுத்தும் என்பதோடு, செயற்கை நுண்ணறிவு உன்னதத்திற்கான ஒரு முக்கிய மையமாகவும் செயல்படும் என்றார்.

அதன் உள்கட்டமைப்பு குறித்து பேசிய வர்த்தக, தொழில் துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங், அருகருகே அமைந்த இரண்டு 7 மாடிக் கட்டடங்கள் அதில் இடம்பெறும் என்றார். ஒரு கட்டடத்தில் கிட்டத்தட்ட 70 நிறுவனங்களுக்கு இடமளிக்கக்கூடிய வகையில் 14,500 சதுர மீட்டர் பரப்பளவிலான வர்த்தகப் பூங்கா அறைகளும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களும் இருக்கும். மற்றொரு கட்டடத்தில் 200 குடியிருப்புகள் அமைந்திருக்கும்.

2028ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள அந்தப் பூங்கா, புதிய தொழில்நிறுவனங்கள், தங்களது ஆய்வாளர்களையும் மேம்பாட்டாளர்களையும் அங்கேயே தங்கவைக்க அனுமதிக்கும். இதன்மூலம் அப்பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

குறிப்புச் சொற்கள்