சிங்கப்பூர் தனது சட்டங்களை நியாயமாகவும் சமமாகவும் அமல்படுத்துகிறது: சண்முகம்

சிங்கப்பூர் தனது சட்டங்களை நியாயமாகவும் சமமாகவும் அமல்படுத்துகிறது: சண்முகம்

2 mins read
ஏமஸ் யீ வழக்குத் தொடர்பில் அமைச்சர் கருத்து
bc8cb900-913a-4049-99e0-6e8964777203
ஏப்ரல் 6ஆம் தேதி வெளியான ‘தி ரிஷி ரிப்போர்ட்’ வலையொலி நிகழ்ச்சியின் ஓர் அத்தியாயத்தில் பேசிய உள்துறை அமைச்சர் கா. சண்முகம். - படம்: ரிஷி புத்ரானி/யூடியூப் காணொளி

மேற்கத்திய ஊடகங்கள் சில மற்றும் தங்களை அறிவாளிகளாகக் கருதிக்கொண்ட சில சிங்கப்பூரர்களின் ‘பெரும்போலித்தனத்தை’ ஏமஸ் யீ வழக்கு வெளிப்படுத்தியது என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

2015, 2016ஆம் ஆண்டுகளில், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதற்காகவும் ஆபாசப் படத்தை வெளியிட்டதற்காகவும் அப்போதைய இளவயது வலைப்பதிவரான யீ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, ​​’தி நியூ யார்க்கர்’ போன்ற ஊடகங்களும் மனித உரிமை ஆர்வலர்களும், வெளிப்படையாகப் பேசுவதற்காகத் துன்புறுத்தப்படும் ஒரு புத்திசாலியான இளையராக அவரை முன்னிறுத்தினர்.

பின்னர் யீ அமெரிக்காவிற்குத் தப்பிச் சென்றார். அங்கு 2018ல் அவருக்குப் புகலிடம் வழங்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, குழந்தைப் பாலியல் படங்களை வைத்திருந்ததற்காக நடுவர் மன்றத்தால் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அண்மையில் அவர் சிங்கப்பூருக்கு நாடுகடத்தப்பட்டார்.

“தி நியூ யார்க்கர் இப்போது என்ன சொல்ல விரும்புகிறது என்பதையும், தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்று திரும்பிவந்து ஒப்புக்கொள்ளும் அளவுக்கு அவர்களுக்குச் சிறிதேனும் நாகரிகம் இருக்கிறதா என்பதையும் நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்,” என்று திங்கட்கிழமை (ஏப்ரல் 6) வெளியான ‘தி ரிஷி ரிப்போர்ட்’ வலையொலியின் ஓர் அத்தியாயத்தில் திரு சண்முகம் கூறினார்.

தற்போது 27 வயதான யீ, மார்ச் 20ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். உரிய அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறியது உட்பட மூன்று குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. ராணுவ ஆட்சேர்ப்புச் சட்டக் குற்றங்களுக்கான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அவர் பிணையில் வெளியே உள்ளார்.

எந்தவோர் இன அல்லது சமயக் குழுவையும் இழிவுபடுத்தும் பேச்சுரிமை விஷயத்தில் சிங்கப்பூரில் தெளிவான சட்டங்கள் உள்ளன என்பதையும், அந்தச் சட்டங்களை அது நியாயமாகவும் சமமாகவும் அமல்படுத்துகிறது என்பதையும் ஏமஸ் யீயின் வழக்கு தெளிவாகக் காட்டியது.

“மக்கள்தான் இதற்குத் தங்கள் சொந்தக் கருத்துகளைக் கூறி, அரசாங்கத்தின் நடவடிக்கைகளை, பேச்சுரிமையைப் பாதிக்கும் ஓர் அடக்குமுறை அரசாங்கம் என்று சித்திரிக்க முயல்கின்றனர்,” என்று அமைச்சர் சண்முகம் கூறினார்.

“கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் பற்றி இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பினால், அதில் என்ன பேச்சுரிமை இருக்கிறது?” என்று அமைச்சர் வினவினார்.

தொடர்புடைய செய்திகள்

“இனம், நிறம், மொழி, சமயம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறுபான்மையினராக இருக்கக்கூடிய வெளிக்குழுவினருக்கும், பொதுவாக பெரும்பான்மையினராக இருக்கும் உட்குழுவிற்கும் இடையிலான பிளவுகள் இயல்பாக்கப்படுவதைத் தடுப்பதற்காக, வெறுப்புப் பேச்சு விவகாரத்தில் சிங்கப்பூர் மிகவும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது,” என்று அந்த வலையொலியில் திரு சண்முகம் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்