சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் அரசாங்கம் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் காரணமாகப் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் இவ்வாண்டின் முதல் காலாண்டில் சிறந்த முறையில் வர்த்தகமாயின.
ஆயினும், ஈரான் போர்ச்சூழல் காரணமாக தற்போது பங்குச் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு (எஸ்டிஐ) 5.1 விழுக்காடு ஏற்றம் கண்டு 4885.45 புள்ளிகளை எட்டியது. இதில், ஈவுத்தொகைகளை (டிவிடெண்ட்) சேர்த்துக் கணக்கிடும்போது மொத்த வருவாய் 5.6 விழுக்காடு உயர்ந்ததாகச் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தைத் தரவுகள் காட்டுகின்றன.
வட்டாரத்தில் உள்ள இதர பங்குச் சந்தைகளுடன் ஒப்பிடுகையில் எஸ்டி குறியீட்டின் செயல்பாடு வலுவாகக் காணப்பட்டது.
மார்ச் மாதத்தில் வட்டாரக் குறியீடுகளைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டதும் தொடர்ச்சியான வந்துசேர்ந்த நிதியும் எஸ்டி குறியீட்டின் பாதுகாப்பான முதலீட்டுத் தகுதியை வலுப்படுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டனர். சிங்கப்பூரின் மீள்திறனுடான வளர்ச்சி வேகமும் அதற்குக் கைகொடுத்தது என்பது அவர்களின் கருத்து.
சிங்கப்பூரில் 30 பெருநிறுவனங்களின் பங்குகள் சராசரியாக ஐந்து விழுக்காடு உயர்ந்தன.
முதலாம் காலாண்டில் சிறப்பான வர்த்தகம் கண்ட 10 பங்குகளின் பட்டியலில் எஸ்டி என்ஜினியரிங், வில்மார், எஸ்ஜிஎக்ஸ், ஹாங்காங்லேண்ட், கெப்பல், ஓசிபிசி வங்கி மற்றும் செம்ப்கார்ப் ஆகியன இடம்பெற்றுள்ளன. $10 மில்லியனுக்கும் மேல் சந்தை மூலதனத்தைக் கொண்ட பெருநிறுவனங்கள் இவை.
ஈரான் போர் ஐந்தாவது வாரத்திற்குள் நுழையும் வேளையிலும் சில சிங்கப்பூர் நிறுவனங்கள் பலனடைந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, ஓசிபிசி வங்கியின் பங்குகள் அதிகபட்ச ஓராண்டு விலையான 22 வெள்ளியை மார்ச் 31ஆம் தேதி கடந்தன. அதனைத் தொடர்ந்து, அந்த வங்கியின் சந்தை மூலதனம் முதல்முறை $100 பில்லியனை எட்டியது.
இங்குள்ள மூன்று உள்ளூர் வங்கிகள் செல்வ வரவுகளால் பலனடைய வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்ட பகுப்பாய்வாளர்கள், ஆயினும் தற்போதைய அபாயத் தவிர்ப்புச் சூழல் அதிக வருமானம் தரக்கூடிய சொத்துகளில் முதலீடு செய்யும் ஆர்வத்தைத் தணிக்கக்கூடும் என்று எச்சரித்தனர்.

