தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூளையில் குருத்தணு மாற்று சிகிச்சை குறித்து சிங்கப்பூர் வல்லுநர்கள் புதிய ஆய்வு

2 mins read
af6576e7-c9f7-4f6d-9333-037355f6c918
மூளைக் குருத்தணு மாற்று சிகிச்சைத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஆய்வாளர்கள் (இடமிருந்து) பேராசிரியர் லிம் கா லியோங், இணைப் பேராசிரியர் பிரகாஷ் குமார், பேராசிரியர் லூயிஸ் டான், பேராசிரியர் டான் எங் கிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பார்க்கின்சன் நோயின் தொடக்கக் கட்டத்தில் இருப்போர் அதனால் கடுமையாகப் பாதிக்கப்படாமல் தடுக்கும் முயற்சியாக, மூளையில் குருத்தணு (stem cell) மாற்று சிகிச்சை தொடர்பில் தேசிய நரம்பியல் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு புரட்சிகரமான திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சிங்கப்பூரில் முதன்முறையாக இடம்பெறும் அச்சோதனை முயற்சிக்கான ஒழுங்குமுறை, நெறிமுறை ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில், அதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் அப்புதுமையான அணுகுமுறையின் முதற்கட்ட சோதனை இடம்பெறும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இப்போதைய சிகிச்சை முறையில் சிக்கலை எதிர்கொண்டுவரும் ஐந்து முதல் எட்டு இளைய நோயாளிகள் குருத்தணு மாற்று சிகிச்சை சோதனை முயற்சிக்கு உட்படுத்தப்படுவர்.

பார்க்கின்சன் நோய் குறித்த ஐந்தாண்டு ஆராய்ச்சிக்காக தேசிய மருத்துவ ஆய்வு மன்றம் கடந்த மே 28ஆம் தேதி வழங்கிய $25 மில்லியன் ஆய்வு மானியத்தின்கீழ் இத்திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.

சிங்கப்பூர் பார்க்கின்சன் நோய்த் திட்டம் அல்லது ‘ஸ்பார்க்கல்’ என இத்திட்டம் அழைக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் ஏறக்குறைய 8,000 பேர் பார்க்கின்சன் நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். டோப்பமைன் எனும் சுரப்புநீரைச் சுரக்கும் மூளை உயிரணுக்கள் இறக்கும்போது பார்க்கின்சன் நோய் மனிதனைத் தாக்குகிறது. டோப்பமைன் அளவு குறையும்போது, நடுக்கம், விறைப்புத்தன்மை போன்ற அறிகுறிகள் தோன்றி, ஒருவரின் நடமாட்டத்தை மெதுவடையச் செய்யும். இந்த நரம்புச்சிதைவு நோயைத் தீர்க்கும் சிகிச்சைமுறை இன்னும் கண்டறியப்படவில்லை. பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு நடப்பதில், சமநிலையைப் பேணுவதில், ஒருங்கிணைப்பில், ஏன் பேசுவதிலும்கூட சிக்கல் ஏற்படலாம்.

புதிய குருத்தணு மாற்று சிகிச்சை முறையின் பாதுகாப்பையும் செயல்திறனையும் மதிப்பிடும் பொருட்டு, அச்சோதனைக்கு உட்படுத்தப்படும் நோயாளிகள் கிட்டத்தட்ட ஈராண்டுகளுக்குக் கண்காணிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்