அமெரிக்கா விதித்துள்ள வரிகளால் சிங்கப்பூரின் ஆகஸ்ட் மாத ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது.
மின்னியல், மின்னியல் அல்லாத பொருள்களின்மீது சுமத்தப்பட்டுள்ள புதிய வரிகள் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்று அறியப்படுகிறது.
அரசாங்கப் பொருளியல் அமைப்பான என்டர்பிரைஸ் சிங்கப்பூர் இந்த நிலவரத்தை கண்காணிப்பதாகவும் நிலைமை மோசமானால் 2025ஆம் ஆண்டுக்கான எண்ணெய் சாரா ஏற்றுமதி முன்னுரைப்பை மறுஆய்வு செய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, 2025 ஜூலையில் மறுஆய்வு செய்யப்பட்டு, 4.7 விழுக்காடு குறைந்த எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி, ஆகஸ்ட் மாதத்தில் 11.3 விழுக்காடு சுருங்கியது.
இருப்பினும் இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் ஒட்டுமொத்த உள்நாட்டு ஏற்றுமதி 1.6 விழுக்காடு உயர்ந்தது.
புளூம்பெர்க் ஆய்வு செய்த பொருளியல் நிபுணர்கள் எதிர்பார்த்த 0.8 விகித உயர்வைவிட ஆகஸ்ட் ஏற்றுமதி விகிதம் குறைந்துள்ளது.
அமெரிக்காவின் வரிகளைத் தவிர்க்க அதற்கு முந்திய மாதங்களில் அதிகரித்த ஏற்றுமதிகள், வரிக்குப் பின் இயல்பாகக் குறைந்ததும் வீழ்ச்சிக்குக் காரணமாகும்.
மூன்றாம் காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தியும் உள்வாங்கும் சாத்தியங்கள் உள்ளன என்பதால் சிங்கப்பூர் பொருளியல் மீள்தன்மை வலுவிழக்கக்கூடும் என்பது நிபுணர்களின் கணிப்பு.
தொடர்புடைய செய்திகள்
நிலைத்தன்மையற்ற உலகியல் சூழல், சவால்கள் நிறைந்த பொருளியல் போன்றவற்றை சிங்கப்பூர் எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மின்னியல் சாதனங்கள், பகுதிமின்கடத்திகள், உயிர்மருத்துவப் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கும் அமெரிக்கா வரிகள் விதிக்கத் திட்டம் உள்ளதென்பதும் கவலைக்குரிய ஒன்றாகும்.
இதற்கிடையே, தென்கிழக்காசிய வட்டார அளவில் உள்நாட்டு வட்டி விகிதங்கள் குறைவதும், கட்டுமானத் துறையின் வளர்ச்சியும் சிங்கப்பூரின் மூன்றாம் காலாண்டின் பொருளியல் வளர்ச்சிக்கு உதவும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.