வெனிசுவேலா தலைநகர் கராக்கஸ் உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்கச் சிறப்புப் படை சனிக்கிழமை (ஜனவரி 3) அதிரடியாகத் தாக்குதல் நடத்தி அந்நாட்டைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது வாஷிங்டன்.
இந்நிலையில், வெனிசுவேலாவில் அமெரிக்காவின் தலையீடு குறித்து சிங்கப்பூர் அரசாங்கம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அது தொடர்பாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
“உலக நாடுகளின் குறிப்பாகச் சிறிய நாடுகளின் சுதந்திரம் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்கும் அனைத்துலகச் சட்டத்தையும் ஐக்கிய நாட்டுச் சாசனத்தின் கொள்கைகளையும் மதித்து நடக்கும் நாடு சிங்கப்பூர்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“அனைத்துலக சட்டங்களை மீறி நடக்கும் தரப்புகளைச் சிங்கப்பூர் எப்போதுமே ஆதரித்ததில்லை,” என்று தெரிவிக்கப்பட்டது.
“வெனிசுவேலாவும் அமெரிக்காவும் நிதானமாகச் செயல்பட வேண்டும். அனைத்துலகச் சட்டத்தையும் ஐக்கிய நாட்டுச் சாசனத்தின் கொள்கைகளையும் பின்பற்றி அமைதிக்கான உடன்பாட்டை எட்ட வேண்டும்,” என்று அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வெனிசுவேலாவில் சிங்கப்பூரர்கள் யாருமில்லை என்றும் தற்போது அங்குச் செல்வதைச் சிங்கப்பூரர்கள் தவிர்க்குமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டது.
மதுரோவை விடுவிக்க அன்வார் வலியுறுத்து
இதற்கிடையே, வெனிசுவேலாவில் அமெரிக்கா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை அனைத்துலக விதிமீறல் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் சாடியிருக்கிறார்.
“அதிபர் மதுரோவும் அவருடைய துணைவியாரும் தாமதமின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். காரணம் எதுவாக இருப்பினும், ஒரு நாட்டின் அதிபரை இன்னொரு நாடு தனது நடவடிக்கையின்மூலம் பதவியிலிருந்து அகற்றுவது அபாயகரமான எடுத்துக்காட்டாகிவிடும்,” என்று ஓர் அறிக்கை வாயிலாகத் திரு அன்வார் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
வெனிசுவேலாவின் அரசியல் எதிர்காலத்தை அந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, அதிபர் மதுரோவையும் அவரின் துணைவியாரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வெனிசுவேலா பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அதிபர் மதுரோ மற்றும் அவரின் துணைவியாரின் தனிப்பட்ட பாதுகாப்பை அமெரிக்கா உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமைச்சு, அவர்களை நாடுகடத்தியது அனைத்துலகச் சட்டத்தை மீறிய செயல் என்றும் குறிப்பிட்டுள்ளது.

