உலகளாவிய மோசடி கும்பல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலரைக் கைது செய்த ஒரு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 2025ஆம் ஆண்டு நவம்பரில் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட வயர்கார்டு ஆசியாவின் முன்னாள் இயக்குநர் திங்கட்கிழமையன்று (மார்ச் 30) ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்டார்.
ஜெர்மனியின் பணப் பரிமாற்ற சேவை வழங்குநர்களைப் பயன்படுத்திக்கொண்ட மோசடி மற்றும் பணமோசடி கும்பல்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உலகளாவிய நடவடிக்கையின்போது, 49 வயது பிரிஜிட் ஹவுசர்-ஆக்ஸ்ட்னர், 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதியன்று சிங்கப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
வயர்கார்டு குழுமத்துடன் தொடர்புடைய சட்டவிரோத கும்பல், கணினி மோசடி, பணமோசடி குற்றங்களுக்காக ஹவுசர்-ஆக்ஸ்ட்னர் தமது சொந்த நாட்டில் தேடப்பட்டு வந்ததாக சிங்கப்பூர் காவல்துறை செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 31) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அவரைக் கைது செய்யுமாறு ஜெர்மனியிடமிருந்து 2025ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று சிங்கப்பூரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதியன்று சிங்கப்பூர் நீதிமன்றம் பிறப்பித்த கைது ஆணை அடிப்படையில், அடுத்த நாள் காவல்துறை அவரைக் கைது செய்தது.
அவர் கைது செய்யப்பட்ட சமயத்தில், அவர் வேலை அனுமதி அட்டை வைத்திருந்தார், ஆனால் வயர்கார்டு தொடர்பில்லாத வேறொரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக காவல்துறை கூறியது.
ஜெர்மானிய அதிகாரிகள் நாடு கடத்துவதற்கான முறையான கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் வரை அவர் பிணையின்றி காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
சட்ட ஒழுங்கு கருதி, தப்பியோடியவர்களைப் பரஸ்பரம் ஒப்படைக்க ஒப்புக்கொள்ளும் இருதரப்பு நாடு கடத்தும் ஒப்பந்தத்தை சிங்கப்பூர் ஜெர்மனியுடன் கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் இத்தகைய ஏற்பாடு பரஸ்பரம் பயனளிப்பதாகக் கருத வேண்டும் என்று 2016ஆம் ஆண்டு சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

