ஃபார்முலா ஒன் (எஃப்1) கார்ப் பந்தயத் தொடரில் விறுவிறுப்பானதாக விளங்குகிறது சிங்கப்பூர் இரவு நேரக் கார்ப் பந்தயம்.
வரும் அக்டோபர் 9, 10, 11ஆம் தேதிகளில் சிங்கப்பூர் இரவு நேரக் கார்ப் பந்தயம் நடக்கிறது.
இந்நிலையில், கார்ப் பந்தயத்திற்கான ‘பிட் லேன்’ அனுபவத்தைப் பெற 4,500 ரசிகர்களுக்குச் சிறப்பு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
அக்டோபர் 8ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் அந்த அரிய நிகழ்வுக்கான குலுக்கல் முறை தற்போது தொடங்கியுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 9 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும் பந்தயங்களுக்கு முன்னதாகவே பிட் லேனில் நடந்து செல்லும் தனித்துவமான வாய்ப்பைப் பெறுவார்கள்.
11 ஃபார்முலா ஒன் அணிகள் தங்களுடைய வாகனங்களை எவ்வாறு பந்தயத்திற்குத் தயார்ப்படுத்துகின்றன என்பதை அவர்கள் நேரில் பார்த்து ரசிக்கலாம்.
இந்தக் குலுக்கலில் பங்கேற்கச் சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு இரண்டு நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும்.
பார்வையாளர்கள் பகுதி ஒன்றில் அமைந்துள்ள எஃப்ஒன் கிராமத்தையும் (F1 Village) ரசிகர்கள் கண்டு மகிழலாம்.
குலுக்கல் முறை செப்டம்பர் 18ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு முடிவடையும்.
2008ஆம் ஆண்டு தொடங்கி 17வது முறையாகச் சிங்கப்பூர் இரவு நேரக் கார்ப் பந்தயத்தை நடத்துகிறது.
பல்வேறு நிகழ்ச்சிகள்
பந்தயம் நடக்கும் வாரம் மட்டுமில்லாமல் அக்டோபர் 2 முதல் 11 வரை பந்தயம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளன.
ரசிகர்களை மகிழ்விக்கப் பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அக்டோபர் 8 முதல் 10 வரை ஆர்ச்சர்ட் ரோட்டின் நீ ஆன் சிட்டி சிவிக் பிளாசாவில் நிகழ்ச்சி ஒன்று இடம்பெறும். இதில் இரவு நேர உணவு, திறந்தவெளித் திரைப்படங்கள், உள்ளூர் கலைஞர்களின் நேரடி இசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும்.
அதேபோல், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12 வரை ஃபூனான், ராஃபிள்ஸ் சிட்டியில் அடிடாஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.
கிளார்க் கீயில் ரே-பான் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களைக் கவரவுள்ளன.


