சிங்கப்பூரில் ஆட்குறைப்பு இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் அதிகரித்ததாக வியாழக்கிழமையன்று (டிசம்பர் 11) வெளியான மனிதவள அமைச்சின் ஊழியர் அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த இரு காலாண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சற்று அதிகம் என்றும் அது குறிப்பிட்டது.
அதே வேளையில், வேலை காலியிடங்களின் எண்ணிக்கை சரிவைச் சந்தித்துள்ளதாகவும் அது சொன்னது.
இரண்டாவது காலாண்டில் 3,540 ஆக இருந்த ஆட்குறைப்பு எண்ணிக்கை மூன்றாவது காலாண்டில் 120 கூடி 3,670 ஆகியது.
1,000 ஊழியர்களுக்கு அதிகபட்சம் இருவர் என்ற அளவில் ஆட்குறைப்பு விகிதம் இருப்பதாக மனிதவள அமைச்சு கூறியது.
நிதி, தொழில்முறை, தகவல் தொடர்பு போன்ற வளர்ச்சி அடைந்துவரும் துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்களில் 74.2 விழுக்காட்டினர் சிங்கப்பூர்க் குடிமக்கள், நிரந்தரவாசிகள் ஆவர்.
எண்ணிக்கை அடிப்படையில் அது 2,720ஆக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆட்குறைப்பைத் திட்டமிடும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
ஜூனில் 1.9 விழுக்காடாக இருந்த அந்த எண்ணிக்கை செப்டம்பரில் 2.3 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது.
அதே நேரத்தில், ஜூனில் 76,900 ஆக இருந்த வேலைவாய்ப்புகள் செப்டம்பரில் 69,200ஆக குறைந்துள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறைவுதான். அப்போது அது 63,400ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் சராசரி மாதாந்தர ஆட்சேர்ப்பு விகிதம் 1.8 விழுக்காடாக இருந்ததாகவும் இது பெருந்தொற்றுக்குப் பிறகான சராசரி மாதாந்தர பணியிலிருந்து விலகுவோர் விகிதமான 1.2 விழுக்காட்டை விஞ்சியுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியது.
2022ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து ஆட்சேர்ப்பு, பணியிலிருந்து விலகுவோர் ஆகியவை குறைந்து வருகின்றன என்றும் அவற்றின் பத்து ஆண்டு சராசரி விகிதத்தைவிட தற்போது அந்த எண்ணிக்கை குறைவாக உள்ளன என்றும் அமைச்சு கூறியது.
பணிநீக்க நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளாமல் மூத்த ஊழியர்களுக்குப் பணி ஓய்வு அளிப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் பணியாளர்களின் எண்ணிக்கையை நிறுவனங்கள் நிர்வகித்து வருவதே இதற்கு காரணம் என அது குறிப்பிட்டது.
மேலும், குறைவான வாய்ப்புகள் இருப்பதாக உணரும் ஊழியர்கள், வேலைகளை அடிக்கடி மாற்றும் போக்கும் குறைந்துள்ளது என்றது அமைச்சு.
வேலை காலியிடங்கள் குறைந்தன என்றாலும் வேலை தேடுவோரின் எண்ணிக்கையும் மூன்றாம் காலாண்டில் குறைவாகவே இருந்தது.
இதனால், வேலையின்மை, வேலை காலியிடங்கள் இடையிலான விகிதம் அதிகரித்துள்ளது.

