சிங்கப்பூரின் உற்பத்தித் துறை நடவடிக்கைகள் பிப்ரவரி மாதத்தில் தொடர்ந்து ஏழாவது மாதமாக வளர்ச்சியைக் கண்டுள்ளன. இருப்பினும், மத்தியக் கிழக்கில் மோசமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக நிறுவனங்கள் கூடுதல் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தித் துறையின் வளர்ச்சி நிலையைக் கணிக்கும் கொள்முதல் பிரிவு மேலாளர்கள் குறியீடு, முந்தைய மாதத்தைவிட 0.1 புள்ளி உயர்ந்து 50.6 புள்ளியாகப் பதிவாகியுள்ளது. புதிய கொள்முதல்கள், புதிய ஏற்றுமதிகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வலுவான வளர்ச்சியே இதற்குக் காரணமாகும்.
பொதுவாக, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் அது வளர்ச்சியையும் 50 புள்ளிக்கும் கீழ் இருந்தால் அது சுருக்கத்தையும் குறிக்கும்.
சிங்கப்பூர் கொள்முதல் மற்றும் பொருள்கள் நிர்வாகக் கழகத் தரவுகளின்படி, மொத்த உற்பத்தியில் 40 விழுக்காடு பங்கு வகிக்கும் மின்னணுத் துறை 51.3 புள்ளிகளைப் பதிவு செய்துள்ளது. இது அத்துறை காணும் தொடர்ச்சியான ஒன்பதாவது மாத வளர்ச்சியாகும்.
“அண்மைய தரவுகள் மின்னணு மற்றும் பகுதிமின்கடத்தி துறைகளின் நிலையான தேவையால் உற்பத்தித் துறை மீள்திறனுடன் இருப்பதைக் காட்டுகிறது,” என்று சிங்கப்பூர் கொள்முதல் மற்றும் பொருள்கள் நிர்வாக இயக்குநர் திரு ஸ்டீஃபன் போ கூறினார்.
“இருப்பினும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோசமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய புவிசார் அரசியல் அபாயங்களை அதிகரித்துள்ளன. குறிப்பாக, உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் விநியோகத் தடைகள் ஏற்படக்கூடும் என்ற கவலையினால் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
டிபிஎஸ் வங்கியின் மூத்த பொருளியல் நிபுணர் சுவா ஹான் டெங் கூறுகையில், “செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய தேவை மற்றும் சிங்கப்பூரின் தரவுப் பதிவுச் சில்லுகள், கணினிச் சேவையகங்கள் ஆகியவற்றின் தயாரிப்புகளுக்கான தேவையால் மின்னணுத் துறை தொடர்ந்து ஒட்டுமொத்த உற்பத்தித் துறைக்குத் தூணாக விளங்கும்,” என்றார்.
“2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உற்பத்தி வளர்ச்சி ஆறு விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கிறோம். இது 2025ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் இருந்த 18.8 விழுக்காடு வளர்ச்சியைவிடக் குறைவு,” என்று ஓசிபிசி வங்கியின் தலைமைப் பொருளியல் நிபுணர் செலீனா லிங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மத்திய கிழக்கு நிலைமை சீரடையவில்லை என்றால் இந்த வளர்ச்சியில் மேலும் சரிவு ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

