சிங்கப்பூரின் ஆலை உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதம் ஆண்டு அடிப்படையில் 17.6 விழுக்காடு கூடியது.
மின்சாரப் பொருள் உற்பத்தி அதிகரித்ததையொட்டி ஆலை உற்பத்தி கூடியது. மார்ச் மாதமும் ஆலை உற்பத்தி 9.2 விழுக்காடு அதிகரித்திருந்தது.
பொருளியல் வளர்ச்சிக் கழகம் செவ்வாய்க்கிழமை (மே 26) வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இத்தகவல்கள் தெரிய வந்தன.
ஏப்ரலில் பதிவான ஆலை உற்பத்தி வளர்ச்சி, எதிர்பார்ப்புகளை விஞ்சியது. சராசரி ஆலை உற்பத்தி வளர்ச்சி விகிதம் 12 விழுக்காடாகப் பதிவாகும் என்று புளூம்பெர்க் நடத்திய கருத்தாய்வில் முன்னுரைக்கப்பட்டிருந்தது.
அடிக்கடி அதிக அளவு மாற்றங்கள் இடம்பெறக்கூடிய உயிரியல் மருத்துவ உற்பத்தித் துறையைக் கருத்தில்கொள்ளாதபோது ஆண்டு அடிப்படையில் உற்பத்தி 21.5 விழுக்காடு கூடியது. மார்ச்சில் பதிவான 12.4 விழுக்காட்டைக் காட்டிலும் அது அதிகமாகும்.
பெரும்பாலான துறைகளில் வளர்ச்சி
ரசாயன, உயிரியல் மருத்துவ உற்பத்தித் துறைகளைத் தவிர ஏப்ரலில் எல்லாத் துறைகளிலும் உற்பத்தி அதிகரித்தது.
மிக முக்கியமானதாகப் பார்க்கப்படும் மின்சாரப் பொருள் துறையில் உற்பத்தி 44 விழுக்காடு அதிகரித்தது. அத்துறையில் கடந்த மார்ச்சில் வளர்ச்சி விகிதம் 29 விழுக்காடு கூடியிருந்தது.
தகவல், தொடர்பு மற்றும் பயனீட்டாளர் மின்சாரப் பொருள்கள், பகுதி மின்கடத்தி ஆகியவற்றில் காணப்பட்ட வளர்ச்சி அதற்குக் காரணம். செயற்கை நுண்ணறிவு சார்ந்த தேவைகள் அதிகரித்தது அதற்குத் தூண்டுகோலாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதற்கு அடுத்தபடியாக பொது உற்பத்தித் துறையும் துல்லியல் பொறியியல் துறையும் ஆக அதிக வளர்ச்சி கண்டன.
போக்குவரத்துப் பொறியியல் துறை ஏப்ரலில் 10.1 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. விமானப் பாகங்கள் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டது போன்றவை அதற்குக் காரணங்கள்.
எனினும், ரசாயனத் துறையில் உற்பத்தி 17.6 விழுக்காடு குறைந்தது. விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் பெட்ரோல், பெட்ரோல் ரசாயனத் துறைகளில் உற்பத்தி குறைந்தது அதற்குக் காரணம்.
அதேபோல், உயிரியல் மருத்துவத் துறையில் உற்பத்தி 16.1 விழுக்காடு குறைந்தது. மருத்துவ சாதனங்களுக்கான தேவை குறைந்தது போன்றவை அதற்குக் காரணங்களாகும்.
காலகட்டத்துக்கேற்ப சம்பந்தப்பட்ட அம்சங்களைக் கருத்தில்கொள்ளும்போது ஏப்ரலில் பொதுவாக உற்பத்தி 5.8 விழுக்காடு கூடியது. மார்ச்சில் காணப்பட்ட 3.5 விழுக்காடு வளர்ச்சியைத் தொடர்ந்து ஏப்ரலிலும் வளர்ச்சி காணப்பட்டது.

