சிங்கப்பூரின் உற்பத்தி நான்காவது மாதமாக அக்டோபரிலும் ஏற்றம் கண்டது. இருப்பினும், ஆண்டுக்காண்டு அடிப்படையில் 1.2 விழுக்காடு என்னும் மெதுவான வளர்ச்சியை அது பதிவு செய்தது.
மாத அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் 22.9 விழுக்காடாகவும் செப்டம்பரில் 9 விழுக்காடாகவும் அதன் வளர்ச்சி பதிவாகி இருந்தது.
இருப்பினும், அக்டோபர் மாத வளர்ச்சி முன்னுரைக்கப்பட்டதைக் காட்டிலும் குறைவு.
அது 2.6 விழுக்காடாக இருக்கும் என்று புளூம்பெர்க் பொருளியல் ஆய்வாளர்கள் எதிர்பார்த்தனர்.
ஏற்ற, இறக்கம் மிகுந்த உயிர் மருத்துவத் துறையைத் தவிர்த்துப் பார்க்கையில் உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 0.4 விழுக்காடு மட்டுமே.
பொருளியல் வளர்ச்சிக் கழகம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) வெளியிட்ட தரவுகள் இதனைத் தெரிவித்தன.
உற்பத்தித்துறையில் மாதா மாதம் பருவத்திற்கு ஏற்ப சரிக்கட்டப்படும் விகிதம் 0.1 விழுக்காடாகப் பதிவானது.
உயிர் மருத்துவத் துறையின் உற்பத்தி வளர்ச்சியை விலக்கிவிட்டுப் பார்க்கையில், மொத்த வளர்ச்சியில் 1.9 விழுக்காடு சரிவு ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையில் ஏறத்தாழ பாதி அளவுக்குப் பங்கு வகிக்கும் மின்னணுத் துறை, ஆண்டு அடிப்படையில் 4.3 விழுக்காடு வளர்ச்சி கண்டது. செப்டம்பரில் அதன் வளர்ச்சி 0.9 என ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தது.
துறைகள் வாரியாகப் பார்க்கையில், பகுதி மின்கடத்தித் துறையின் வளர்ச்சி விகிதம் 2.1 விழுக்காடாக இருந்தது.
இதர மின்னணுப் பொருள்கள் மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்தி 11.9 விழுக்காடாகவும் கணினி மற்றும் தரவு சேமிப்புச் சாதனங்களின் உற்பத்தி 22.9 விழுக்காடாகவும் விரிவடைந்தன.
அவற்றுடன், தகவல்தொடர்பு மற்றும் பயனீட்டாளர் மின்னணுச் சாதனங்களின் உற்பத்தி 20.3 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு செய்தது.
இதர துறைகளின் வளர்ச்சி நிலவரம் இவ்வாறிருக்கையில், துல்லியப் பொருளியல் துறை மட்டும் அக்டோபரில் மோசமடைந்தது. 2023 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், அதன் வளர்ச்சி 15.9 விழுக்காடு சுருங்கியது.