தைவானின் மயோலி பகுதியில் சிங்கப்பூரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று விபத்தில் சிக்கியது.
விபத்து சனிக்கிழமை (டிசம்பர் 14) பிற்பகல் நடந்தது. அப்போது அந்த காரில் சிங்கப்பூரைச் சேர்ந்த 36 வயது ஆடவரும் அவரது மனைவி மற்றும் மூன்று வயது பெண் குழந்தையும் இருந்தனர்.
விபத்தில் காரில் இருந்த 33 வயது மாது உயிரிழந்தார். அவர் சீனக் குடிமகள். அவருக்கு காயங்கள் ஏற்பட்டதால் மாண்டார் என்று தைவானிய ஊடகங்கள் குறிப்பிட்டன.
மேலும், காரில் இருந்த ஆடவருக்கும் குழந்தைக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆடவர் வாடகை காரை எடுத்துக்கொண்டு தமது குடும்பத்துடன் ஸ்ட்ராபெரி தோட்டத்திற்கு சென்றார். அதன் பின்னர் வேறு இடத்திற்குச் செல்லும் போது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து அவர் விபத்தில் சிக்கினார்.
விபத்து தொடர்பான காணொளியும் வெளியாகியுள்ளது.
அதில் கார் வலப்பக்கம் திரும்புவதற்குப் பதில் இடப்பக்கம் திரும்பி ஒரு மின்சாரக் கம்பம்மீது மோதியது. அதில் சேதமடைந்த கம்பம் சாலையில் விழுந்தது. அதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

