லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள அதானி குழுமத்துடனான சிங்கப்பூர் நிதித் துறை தலையீடு குறிப்பிட்ட அளவே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதனை, ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாள் சோதித்து அறிந்தது.
உள்ளூர் வங்கித் துறை உட்பட அதானி குழுமத்தின் ஈடுபாடு சிறிய அளவிலேயே இருப்பதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் (எம்ஏஎஸ்) கூறி உள்ளது.
“கடன் வாங்கியோர் மற்றும் அவர்களோடு தொடர்புள்ளவர்களின் நிதி விவகாரங்களை மறுஆய்வு செய்து நிர்வகிக்கப் போதுமான நடைமுறைகள் வங்கிகளிடம் உள்ளன,” என்று ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தின் லஞ்சக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் அதானி குழுமம் தொடர்பாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வினவியதற்கு ஆணையம் அந்தப் பதிலைத் தந்தது.
அதானி குழுமம் இந்தியாவின் ஆகப்பெரிய கூட்டு நிறுவனம் ஆகும், துறைமுகங்கள், விமான நிலையங்கள் என்பதில் இருந்து தொடங்கி உற்பத்தி மற்றும் எரிசக்தி வரை அதன் நிர்வாகப் பகுதிகள் நீள்கின்றன.
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, அவரது உறவினர் உட்பட மேலும் ஏழு பேர் மீது அமெரிக்க அரசாங்க வழக்கறிஞர்கள் லஞ்ச வழக்குத் தொடுத்துள்ளனர்.
சோலார் எனப்படும் சூரியசக்தி மின்சாரத்திற்கான குத்தகைகளைப் பெற இந்தியாவிலுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு US$250 மில்லியனுக்கு மேல் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இருபது ஆண்டு காலத்திற்குரிய US$2 பில்லியன் மதிப்பிலான குத்தகை அது.
அமெரிக்க முதலீட்டாளர்களிடம் பணம் திரட்டியபோது லஞ்ச ஊழல் விவகாரத்தை அதானி குழுமம் மூடி மறைத்ததாக அமெரிக்காவின் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 20ஆம் தேதி அந்தச் செய்தி வெளியானதும் அதானி குழுமத்திற்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்ததாக ராய்ட்டர்ஸ் கூறியது.