தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உத்தரப் பிரதேசத்தில் வர்த்தக வாய்ப்புகள் தேடும் சிங்கப்பூர் நிறுவனங்கள்

2 mins read
01f50ad9-ea89-4b39-91b0-34b3a51130b8
உள்கட்டமைப்பு, கழிவுப் பொருள் நிர்வாகம் உட்பட பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபடும் சிங்கப்பூர் நிறுவனங்களை உத்தரப் பிரதேசம் அண்மை காலமாக ஈர்த்து வருகிறது. படம்: SGININDIA/TWITTER -

சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வர்த்தக வாய்ப்புகளைத் தேடுகின்றன. உள்கட்டமைப்பு, கழிவுப் பொருள் நிர்வாகம் உட்பட பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபடும் சிங்கப்பூர் நிறுவனங்களை உத்தரப் பிரதேசம் அண்மை காலமாக ஈர்த்து வருகிறது.

பல்வேறு துறைகளில் உத்தரப் பிரதேச நிறுவனங்களும் சிங்கப்பூர் நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்பட சிங்கப்பூர் அரசாங்கமும் உத்தரப் பிரதேச மாநில அரசும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அவற்றில் நகர மேம்பாட்டு, நீடித்த நிலைத்தன்மை உள்ள தொழிற்பூங்காக்களை மேம்படுத்துவது, திறன் பயிற்சிகள் ஆகியவை அடங்கும்.

குறிப்பாக, நொய்டா அனைத்துலக விமான நிலையத்துக்கான கட்டுமானப் பணிகளில் சிங்கப்பூர் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

அடுத்த ஆண்டிறுதிக்குள் அந்த விமான நிலையம் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியத் தலைநகர் புதுடெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இந்தப் புதிய விமான நிலையம் மிகுந்த பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது.

நொய்டா அனைத்துலக விமான நிலையத்தில் சரக்கு நிலையம் ஒன்றைக் கட்ட 'சேட்ஸ்' எனப்படும் சிங்கப்பூர் விமான நிலைய முனையச் சேவைகள் நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விமான நிலையத்துக்குத் தேவையான முனையங்கள், துணைச் சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகளை வடிவமைக்க சுர்பானா ஜூரோங் நிறுவனம், எஸ்எம்இசி என்ற தனது உறுப்பிய நிறுவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியா மாவட்டத்தில் திறன் நீர் சமூகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் சுர்பானா ஜூரோங் குழுமத்தின் பங்களிப்பும் உள்ளது.

அயோத்தியா மாவட்டத்தில் கூடுதல் குடிநீர் வழங்கவும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு குடிநீரை விநியோகிக்கவும் இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

"சிங்கப்பூர் நிறுவனங்கள் வளர்ச்சி அடைய உத்தரப் பிரதேசம் பல்வகை வாய்ப்புகளை வழங்குகிறது என்று என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் தெற்கு ஆசியப் பிரிவு இயக்குநர் திருவாட்டி ஆட்ரி டால் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற முதலீட்டு உச்சநிலை மாநாட்டில் சிங்கப்பூரைச் சேரந்த 21 நிறுவனங்கள் பங்கேற்றன.